

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்துக்காக ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தை (www.ulagatamilsangam.org) முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்குவது தொடர்பாக 1981-ம் ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டின்போது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவித்தார். அதன்படி 1986-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் சங்கம் தொடங்கப்பட்டது. மதுரை தல்லாகுளத்தில் இந்த சங்கத்துக்காக 14.15 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்தை சிறப்புடன் நிர்வகிக்க தனி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, சங்கப் பணிகள் சிறப்புடன் நடந்து வருகின்றன.
உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு பெருந்திட்ட வளாகம் கட்ட ரூ.25 கோடியும், ஊதியம் மற்றும் திட்டப் பணிகளுக்கு மானியமாக ரூ.1 கோடியே 43 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக உலகத் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளை உலகில் உள்ள அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் செலவில் சங்கத்துக்கென இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதிய இணையதளத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத் தார்.
அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.