

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் புகார் கொடுத்தனர்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாஅளித்த பேட்டியின்போது, நடிகர்சிவகார்த்திகேயனின் தந்தைஇறப்புக்கும் பாபநாசம் எம்எல்ஏவாக இருக்கும் மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கும் தொடர்பு இருப்பதுபோல பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எச்.ராஜா மீது மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அப்ரார் கூறியதாவது:
சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் தாஸ், மாரடைப்பால் 19 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எச்.ராஜா வேண்டுமென்றே ஜவாஹிருல்லாவின் பெயரை கெடுப்பதற்காக பொய்யான கருத்துகளை பரப்புகிறார்.
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மோதலை ஏற்படுத்தும் வகையில்கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எச்.ராஜா மீது புகார் கொடுக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயனும் தலையிட்டு எச்.ராஜா மீது புகார் தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.