

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை யாஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதுஒடிசா - மேற்கு வங்கம் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மே 24-ம்தேதி (நேற்று) காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. ‘யாஸ்’ என்று பெயரிடப்பட்ட இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் வலுப்பெற்று, ஒடிசாவின் பாராதீப் - மேற்கு வங்கத்தின் சாகர்தீவு இடையே வரும் 26-ம் தேதி(நாளை) பிற்பகலில் கரையை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக 27-ம் தேதி வரை தமிழக, ஆந்திர கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 26-ம்தேதி வடக்கு வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 110 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக 25, 26-ம் தேதிகளில் கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27-ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 28-ம் தேதி இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்யக்கூடும்.
மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.