Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

நோய் பரவலுக்கு காரணமாகும் நோயாளிகளின் உதவியாளர்கள்;100 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர்: அதிகப்படியான வேலைப்பளுவால் தவிக்கும் மருத்துவர்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு தேவையானவற்றை செய்து தர மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் அவர்களது உறவினர்கள். படம்: பு.க.பிரவீன்

மதுரை

அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் கரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களது உதவியாளர்களும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர். மருத்துவமனைகளில் போதிய ஊழியர்கள் இல்லாததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

மதுரையில் அரசின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கரோனா சிறப்புசிகிச்சை மையத்தில் 1,800 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

நோயாளிகளுக்கு சீட்டு பதியும் இடத்தில் தொடங்கி ஆக்சிஜன் படுக்கைகள், ஐசியூ வார்டுகள் வரை உதவியாளர்கள் சர்வசாதாரணமாக சென்று வருகின்றனர். இரவில் நோயாளிகளின் அருகிலேயே உதவியாளர்கள் தரையில் படுத்துத் தூங்குகின்றனர். நோயாளிகளுக்கு உரிய உணவை மருத்துவப் பணியாளர்கள் நேரடியாக சென்று வழங்குவதில்லை. ஒரு நோயாளிக்கு ஒரு உதவியாளர் என்று குடும்ப உறுப்பினர்கள் ‘ஷிப்ட்’ முறையில் 3 முதல் 5 பேர் வரை வார்டுக்கு தினமும் வந்து செல்கிறார்கள்.

கரோனா நோயாளிகளுக்கு வெந்நீர் அத்தியாவசிய தேவை. அதனால்,உதவியாளர்களே மருத்துவமனைக்கு வெளியே பணம் கொடுத்து வாங்குகின்றனர். சமூக இடைவெளி, கையுறை போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் எதையும் உதவியாளர்கள் கடைபிடிப்பதில்லை. நோயாளிகளுடனே அமர்ந்துசாப்பிடுகின்றனர். நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் இவர்கள் மூலமாகவே கரோனா தொற்று இந்த ஆண்டு வேகமாகப் பரவியதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு வார்டுகளிலும் இறந்தோரின் உடல்களை அப்புறப்படுத்த 5 முதல் 6 மணி நேரமாகிவிடுகிறது. கண் முன்னே நடக்கும் மரணங்களைப் பார்ப்பது, தனக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என்ற உள்ளுணர்வால் நோயாளிகள் தன்னம்பிக்கையை இழக்கின்றனர்.

மருத்துவமனைக்கு நடந்து வந்த நோயாளிகள்கூட உயிரிழப்பதாக உதவியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கரோனா வார்டுகளில் உதவியாளர்களை அனுமதிக்கும் அரசின் அணுகுமுறையில் மாற்றம் வரவேண்டும்.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறியதாவது: தற்போது உள்ள நெருக்கடியான நிலையில் மருத்துவர்கள் யாரும் சலுகைகளை எதிர்பார்க்கவில்லை. மிக அதிகப்படியான வேலைப் பளுதான் சிகிச்சை வழங்குவதில் பின்னடைவை ஏற்படுத்துகிறது. செவிலியர்கள் இல்லாமல் நோயாளிகளைபராமரிக்க முடியாது. 100 நோயாளிகளுக்கு ஒருசெவிலியர் மட்டும்தான் உள்ளனர். அவர்கள் 8 மணி நேரம் பிபி கிட் போட்டுக் கொண்டு 100 நோயாளிகளின் ஆவணங்களைப் பராமரிப்பதற்கே நேரம் கிடைப்பதில்லை.

இதற்கிடையில் அந்த இடைவெளியில் பல மரணங்கள் நிகழ்ந்து விடுகின்றன. இறப்பை உறுதி செய்து உடல்களை ஒப்படைக்க செவிலியர்கள் 8 வகையான படிவங்களில் மருத்துவர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டி இருக்கிறது. மருத்துவர்களும் நோயாளிகளின் சிகிச்சை விவரங்களை அடுத்து பணிக்கு வரும் மருத்துவர்களுக்குத் தெரிவிக்க ஆவணங்களைப் பராமரிக்க வேண்டி உள்ளது.

இந்தப்பணிகளையும் பார்த்துவிட்டு நோயாளிகளைக் கவனிப்பது மிகப் பெரிய சிரமம். கோவிட் இரண்டாவது அலையில் நோயின் தீவிரம் அதிகமாக உள்ளது. அதிக பாதிப்புடன் வரும் நோயாளிகளை தீவிர சிகிச்சையில் வைத்து கவனிக்க வேண்டியுள்ளது. ஆகையால் இந்த யதார்த்தத்தை புரிந்த கொள்ளுங்கள். கூடுமானவரை தரமான சிகிச்சைதான் அளிக்கிறோம்.

கரோனா சிகிச்சை என்பது நுரையீரல் சிறப்பு மருத்துவர்களும், பொது மருத்துவ நிபுணர்களும் பார்க்க வேண்டியது. ஆனால், மற்ற துறை சிறப்பு மருத்துவர்களையும் கரோனா வார்டு பணிக்கு அனுப்புகின்றனர். நோய் முற்றி ரத்த உறைவு, நுரையீரல் பாதிப்புடன் வரும் கரோனா நோயாளிகளுக்கு மற்ற மருத்துவர்கள் எளிதாக சிகிச்சை அளித்துவிட முடியாது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x