

கரோனா காலத்தில், தமிழகம் முழுவதும் மருத்துவப் பணியாளர் களுக்கு ஈஷா சார்பில் உணவு, சிற்றுண்டிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, கோவை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு, சிற்றுண்டி போன்றவற்றை ஈஷா வழங்கி வருகிறது. கரோனா தொற்று 2-வது அலையின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த சவாலான சூழலில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இரவு, பகலாக தொடர்ந்து சேவையாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்க ஈஷா முடிவு செய்தது.
அதன்படி, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பணியாற்றும் 400 மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. மேலும், ஸ்டான்லி மருத்துவமனை பணியாளர்களுக்கும் சேர்த்து 6,900 சிற்றுண்டி பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. அதேபோல், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு 20,520 சிற்றுண்டி பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டன. தருமபுரி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் இன்னும்|ஓரிரு தினங்களில் வழங்கப்பட உள்ளது. முன்னதாக, புதுச்சேரியில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கான சிற்றுண்டி பாக்கெட்டுகள் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் நேரில் வழங்கப்பட்டது.
இதுதவிர, கோவையில் 43 கிராமங்களை தத்தெடுத்து கரோனா நிவாரணப் பணிகளை ஈஷா மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.புதுச்சேரியில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கான சிற்றுண்டி பாக்கெட்டுகளை,துணை நிலை ஆளுநர் தமிழிசை சவந்தரராஜனிடம் விநியோகித்த ஈஷா பணியாளர்கள்.