ஊரடங்கு காலத்தில் உரிய விலை கிடைக்காததால் மலர்களை பறித்து கீழே கொட்டும் அவலம்: விவசாயிகள், தினக்கூலி தொழிலாளர்கள் பாதிப்பு

உரிய விலை இல்லாததால் நிலத் தில் கொட்டப்பட்டுள்ள பூக்கள்.
உரிய விலை இல்லாததால் நிலத் தில் கொட்டப்பட்டுள்ள பூக்கள்.
Updated on
1 min read

புதுச்சேரி கிராமப் பகுதிகளில் மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் உரிய விலை கிடைக்காததால் மலர்களை பறித்து கீழே கொட்டும் அவலம் நிலவுகிறது.

புதுச்சேரி அருகே கிராமப் பகுதிகளான திருக்கனூர், வம்புபட்டு, சோமப்பட்டு, குமாரப்பாளையம் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து அனைத்து கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்குகின்றன. இதனால் மலர் விற்பனை நிலையங்களும் குறைந்த நேரமே இயங்குவதுடன், வாங்குவோரும் அதிகமில்லாததால் விலை சரிந்துள்ளது.

இதுதொடர்பாக கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் கூறுகையில், “மலர்களை பறித்து புதுச்சேரி, திண்டிவனம், கடலூர், விழுப்புரம் பகுதிகளுக்கு அனுப்புவோம். கரோனா காலம் என்பதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கரோனாவுக்கு முன்பு கனகாம்பரம் கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், மல்லி அரும்பு ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.150-க்கும் விற்றது. ஒரு கிலோ பூ பறிக்க ரூ. 60-ஐ தொழிலாளர்களுக்கு தருவோம். தற்போது விலையும் கடுமையாக குறைந்துள்ளது. சம்பங்கி கிலோ ரூ.6-க்கும், பட்ரோஸ் கிலோ ரூ.10-க்கும், குண்டுமல்லி, அரும்பு ரூ.30-க்கும், கனகாம்பரம் ரூ.100-க்கும் என விலை சரிந்துள்ளது. முந்தைய விலையை விட கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பறித்து மார்க்கெட் கொண்டு வந்தாலும் வியாபாரிகள் வாங்குவதில்லை” என்கின்றனர்.

ஏராளமான விவசாயிகள் பூக்களை பறித்து கொட்டத் தொடங்கியுள்ளனர். இதுபற்றி விவசாயிகளிடம் விசாரித்ததற்கு, “பல ஏக்கரில் பூக்களை பயிரிட்டபலரும் செடியில் விளைந்த மலர்களை பறித்து கொட்டி விடுகிறார்கள். சிலர் உரமாக்குகிறோம். செடியிலேயே மலர்கள் இருந்தால் அந்த செடி வீணாகிவிடும் என்பதால் மலர்களை பறிக்கிறோம். மலர்களை பறிக்க கூலி விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாமல் பலரும் அந்த செடியையே வெட்டி விடும் சூழலும் நிலவுகிறது.

பூ விவசாயத்தில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்கள் கூறுகையில், “பூ அறுவடை செய்யும் கூலித் தொழிலாளர்கள் கிராமங் களில் ஏராளமானோர் உண்டு. தினந்தோறும் ரூபாய் 200 கிடைத்துவந்தது. தற்போது அது கிடைக்கவில்லை. அரசு இதனை கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in