

மத்திய அரசுக்கு எதிராக நாளை(மே 26) கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக ஏஐடியூசி சேதுசெல்வம், சிஐடியூ சீனுவாசன்,ஐஎன்டியூசி ஞானசேகரன், ஏஐசிசிடியூ புருஷோத்தமன், எல்எல்எப் செந்தில், எம்எல்எப் வேதா வேணுகோபால், ஏஐயூடியூசி சிவகுமார்ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2014ல் பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார். கரோனா 2வது அலை புயலாக பரவி லட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். மக்களைப் பாதுகாக்க வேண்டிய மத்திய மோடி அரசு பொறுப்பை புறக்கணித்து விட்டது. பல சட்டங்களை கொண்டுவந்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. எனவே மத்திய மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக அரசு பொறுப்பேற்ற மே 26-ம் தேதி இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாக கடைபிடிக்க டெல்லியில் போராடும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டுக் குழு தீர்மானித்துள்ளது. விவசாயிகளோடு இணைந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்க மத்திய தொழிற்சங்கங்களும் முடிவு எடுத்துள்ளன.
அனைத்து தொழிற்சங்க முடிவின்படி புதுவையில் நாளை (மே 26) கருப்பு பேட்ஜ், கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை அணிந்து சங்க அலுவலகம், தொழிற்சாலை, நிறுவனங்கள், அலுவலக வாயில், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும்.
மத்திய அரசு அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க வண்டும். தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். மின்சாரம், மோட்டார் வாகன சட்ட திருத்தத்ததை கைவிட வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் இந்தப்போராட்டத்தில் வலியுறுத்தப்படும்" என்று தெரிவித் துள்ளனர்.