

சிவகங்கை மாவட்டத்தில் தினமும் சராசரியாக 200 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால், அந்தந்த பகுதி அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் ‘படுக்கை பற்றாக்குறையை தவிர்க்க ரூ.10 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட மகப்பேறு கட்டிடத்தில் விரைவில் 300 படுக்கைகளுடன் கரோனா வார்டு திறக்கப்படும்,’ என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். ஆனால் அதற்கான பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கரோனா அறிகுறியுடன் உள்ளவர் களுக்கு வார்டுக்கு வெளியே வளாகத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும்போது, சிலிண்டர்கள் பொருத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி படுக்கைகளை மாற்ற வேண்டிய நிலையும் உள்ளது. இதையடுத்து புதிய கட்டிடத்தில் விரைந்து கரோனா வார்டு திறக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.