

‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வேளாண்மைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகளில்நீர் மட்டம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து கன்னிப்பூ சாகுபடி பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கால் கடைகள் மற்றும்கூட்டுறவு சங்கங்கள் திறக்கப்படாததால் தேவைக்கேற்ப உரம்கிடைக்காமல் விவசாயிகள் கவலையடைந்தனர். நடவுப்பணி நடைபெறும் வேளையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 22-ம் தேதி ‘இந்து தமிழ்’நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வேளாண்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக நாகர்கோவில் வேளாண்மை இணை இயக்குநர் சத்தியஜோஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
விவசாயிகள் நலன் கருதி தனியார் விற்பனை நிலையங்கள் மூலம் தேவைக்கேற்ப அனைத்து வகையான ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இருப்புவைக்கப்பட்டு ஊரடங்கு சட்டங்களுக்கு உட்பட்டு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வேளாண் பணிகளை மேற்கொள்ளவும், கருவிகளை தங்கு தடையின்றி எடுத்துச்செல்லவும், அறுவடை செய்தவிளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லவும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
விவசாயிகள் தங்களுக்கு ஏதேனும் வேளாண்மை சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப ஆலோசனைகள், உரம் தேவை மற்றும் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு சுரேஷ் 9443700807, ராஜாக்கமங்கலம் ஒன்றியத்துக்கு கீதா 9442136046, தோவாளை ஒன்றியத்துக்கு ஜோஸ் 9443283954, குருந்தன்கோடு, தக்கலை பகுதிக்கு விமலா 9442521636, திருவட்டாறு, மேல்புறம் ஒன்றியத்துக்கு சந்திரபோஸ் 9442153516, கிள்ளியூர், முஞ்சிறை பகுதிக்கு மனோரஞ்சிதம் 9842792877 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
டிஏபி உரங்களை தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.1,200-க்கு மேல் கூடுதலாக விற்பனை செய்தால் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ஜெங்கின்ஸ் பிரபாகரை செல்போன் எண் 9443285842-ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.