பவுர்ணமியில் தற்காலிக சபாநாயகர், எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் பதவியேற்பு

பவுர்ணமியில் தற்காலிக சபாநாயகர், எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் பதவியேற்பு

Published on

பவுர்ணமியான வரும் 26- ம் தேதி ராஜ்நிவாஸில் தற்காலிக சபாநாயகர் பதவியேற்பும், அதையடுத்து சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பும் நடக்கின்றன.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக கடந்த 7ஆம் தேதி ரங்கசாமி மட்டும் பதவியேற்றார்.

அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. 9ஆம் தேதி தற்காலிக சபாநாயகரை நியமிக்கும் கடிதத்தை ஆளுநர் தமிழிசைக்கு முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்தார். சீனியர் எம்எல்ஏவான லட்சுமி நாராயணன் தற்காலிக சபாநாயகராகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அதே 9ஆம் தேதியன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முதல்வர் ரங்கசாமி, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை முடிந்து கடந்த 17ஆம் தேதி புதுச்சேரி திரும்பினார். தற்காலிக சபாநாயகர் நியமனம் தொடர்பாக ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காமல் நிலுவையில் இருந்ததால் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியவில்லை. இதனால் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்தனர். அமைச்சர்கள் பதவிகளை ஒதுக்கீடு செய்வதில் என்.ஆர்.காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படாததும் காரணம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் கடந்த 21ஆம் தேதியன்று புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக முதல்வரின் பரிந்துரையின் பேரில் எம்எல்ஏ லட்சுமி நாராயணனைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை நியமித்ததாக அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகர் ஆய்வினை மேற்கொண்டார். வீட்டில் ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.

அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, "பவுர்ணமி நாளான வரும் 26ஆம் தேதி காலை ராஜ்நிவாஸில் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்கிறார். முன்னதாக, சட்டப்பேரவையைக் கூட்ட ஆளுநர் அனுமதி பெறப்படும். அதனால் 26ஆம் தேதியே சட்டப்பேரவை வந்து எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்வு நடக்கும். பிறகு சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும். ஒருவர் மட்டுமே போட்டியிடுவார் என்பதால் ஒருமனதாக அவரே சபாநாயகர் பதவியில் அமர்த்தப்படுவார். விரைவில் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வும் நடக்கும்" என்று தெரிவிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in