

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ பல்நோக்குப் பணியாளர்களை முன்களப் பணியாளர்கள் பட்டியலில் சேர்க்காததால் வேதனையில் உள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் முறையிலும், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்தம் அடிப்படையிலும் மருத்துவ பல்நோக்கு பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
பல்நோக்கு பணியாளர்கள் தூய்மைப் பணி, நோயாளிகளை ஸ்டிரச்சரில் அழைத்துச் செல்லுதல், காவல் பணி, அறுவை சிகிச்சை அரங்குகள், வார்டுகளிலும் மருத்துவ உதவி போன்ற பணிகளை செய்கின்றனர்.
தற்போது அவர்களுக்கு கரோனா வார்டிலும் பணி வழங்கப்படுகிறது. மேலும் கரோனா வார்டில் உள்ள கழிவறைகளையும் சுத்தம் செய்கின்றனர்.
இதுதவிர அரசு மருத்துவமனை பல்நோக்கு பணியாளர்கள் கரோனா பரிசோதனை மாதிரிகளை பரிசோதனை மையங்களுக்கு எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளை செய்கின்றனர்.
ஆனால் அவர்களை முன்கள பணியாளர்களாக அரசு அங்கீகரிக்கவில்லை. மேலும் கரோனா வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஓய்வு எடுக்க அறை வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது.
ஆனால் பல்நோக்கு பணியாளர்கள் கரோனா வார்டுகளில் பணிபுரிந்துவிட்டு, அப்படியே வீடுகளுக்கு சென்றுவிடும் நிலை உள்ளது.
அவர்களை முன்கள பணியாளர்களாக அங்கீகரிக்காததால் ஊக்கத் தொகை, கரோனாவால் இறந்தால் நிவாரணத் தொகை கிடையாது. இதனால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பல்நோக்கு பணியாளர்கள் கூறியதாவது:
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 320 பேர் பணிபுரிகிறோம். பலர் 8 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிகிறோம். கடந்த சில ஆண்டுகளாக ஊதிய உயர்வும் இல்லை.
தற்போது எங்களை முன்களப் பணியாளர்களாக அங்கீகரிக்காததால் கரோனாவால் நாங்கள் பாதிக்கப்பட்டால் எங்கள் குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் கிடைக்காது.
எங்களுக்கு மட்டும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கை இல்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், நிரந்த மருத்துவ பணியாளர்களை போல் தங்களையும் முன்கள பணியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும், என்று கூறினர்.