Last Updated : 24 May, 2021 07:15 PM

 

Published : 24 May 2021 07:15 PM
Last Updated : 24 May 2021 07:15 PM

ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 135 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி: 10 மாவட்டங்களுக்கு விநியோகம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இதுவரை 135 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, 10 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து மருத்துவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது.

இதையடுத்து தூத்துக்குடியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதன்பேரில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கியது.

இங்கு கடந்த 12-ம் தேதி இரவு முதல் முறையாக மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது.

இங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மட்டும் 4.82 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மறுநாளே (மே 13) தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

பின்னர் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு கடந்த 19-ம் தேதி மீண்டும் திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. அதன் பிறகு தொடர்ந்து திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, அனைத்து தென்மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

முதலில் தினசரி 10 டன் அளவுக்கு ஆக்சிஜன் உற்பத்தி இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து நேற்று 29 டன் என்ற அளவை எட்டியுள்ளது.முதல் இரு தினங்கள் 2 டேங்கர் லாரிகள் மூலம் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டது. பின்னர் 3 டேங்கர்களாக உயர்ந்தது.

நேற்று 5 டேங்கர் லாரிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து திரவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 29.06 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது.

இதுவரை மொத்தம் 135.23 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, தேனி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு 28.12 டன் திரவ ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு 112.94 டன் திரவ ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் தொடர்ந்து திரவ ஆக்சிஜன் தடையின்றி உற்பத்தி செய்யப்பட்டு, அரசு வழிகாட்டுதலின் படி தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x