

திருச்சி மாநகராட்சியில் உள்ள 18 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குறிப்பிட்ட ஆன்டிபயாடிக் மாத்திரை (அசித்ரோமைசின்) இல்லாததால் கரோனா நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து கொள்பவர்களைத் தவிர்த்து, எஞ்சியவர்களில் தீவிர கரோனா தொற்று உள்ளவர்கள் மற்றும் தொடர் கண்காணிப்பு தேவைப்படுவோர் ஆகியோருக்கு மட்டும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கரோனா பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டோ அல்லது மாவட்டத்தில் உள்ள 12 கரோனா பாதுகாப்பு சிகிச்சை மையங்களில் ஏதாவது ஒன்றில் சேர்க்கப்பட்டோ சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரோனா பாதுகாப்பு சிகிச்சை மையங்களில் சேர்க்கப்படுவோரும் 5 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, வீடுகளில் சென்று தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்றைய (மே 23) நிலவரப்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,143. இதில், 3,805 பேர் மருத்துவமனைகளிலும், 7,338 பேர் வீட்டுத் தனிமைப்படுத்துதலிலும் உள்ளனர்.
இந்நிலையில், திருச்சி மாநகரப் பகுதியில் உள்ள 18 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனாவுக்கு அளிக்கப்படும் குறிப்பிட்ட ஆன்டிபயாடிக் மாத்திரை கடந்த 2 நாட்களாக இல்லை என புகார் எழுந்துள்ளது.
இதனால், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் அவதிக்குள்ளாவதுடன், அவர்களது உறவினர்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாகினர். இதனால், தனியார் மருந்தகத்தில் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
திருச்சி எடமலைப்பட்டிப்புதூரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா நோயாளியின் உறவினர் ஒருவர் இன்று (மே 24) மாத்திரை வாங்கச் சென்றபோது, குறிப்பிட்ட ஆன்டிபயாடிக் மாத்திரை அங்கு மட்டுமின்றி மாநகரில் உள்ள 18 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இல்லை என்று தெரியவந்தது.
இதுகுறித்து, நோயாளியின் உறவினர் கூறும்போது, "இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கரோனா பரிசோதனைக்காகவும் மற்றும் மருந்து, மாத்திரைகள் வாங்கவும் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கரோனா நோயாளிக்கான குறிப்பிட்ட ஆன்டிபயாடிக் மாத்திரை இல்லை என்று கூறியதுடன், மருந்துச் சீட்டில் உள்ள பிற மருந்துகளையும் தர ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மறுத்துவிட்டனர்” என்றார்.
இது தொடர்பாக, மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியனிடம் கேட்டபோது, "திருச்சி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரிடம் தெரிவித்து, குறிப்பிட்ட ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உடனடியாக வரவழைத்து, திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எடமலைப்பட்டிப்புதூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துச் சீட்டில் உள்ள பிற மாத்திரைகளையும் தரவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.