

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நேற்று அதிகாலையில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி போதிய அளவில் மாநகர பேருந்துகள் இயக்காததால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
வைகுண்ட ஏகாதசியைமுன்னிட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் அதிகாலை 2.30 மணி முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொள்ள பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்கு தாம்பரம், திருவொற்றியூர், கேளம்பாக்கம், திருவான்மியூர், மாம்பலம், சோழிங்கநல்லூர், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். ஆனால், போதிய அளவில் மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர். வேறு வழியின்றி ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகள் மூலம் பயணம் மேற்கொண்டனர்.
இது தொடர்பாக பக்தர்கள் கூறுகையில், ‘‘ஆண்டு தோறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கும் போது வழக்கமாக பல்வேறு இடங்களில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு போதிய அளவில் மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை.
பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். காலை 6 மணிக்கு பிறகுதான் பேருந்துகள் கணிசமாக இயக்கப்பட்டன’’ என்றனர்.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘வழக்க மாக இயக்குவதுபோல் தான் இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகள் இயக்கு வது குறைக்கப்பட வில்லை ’’ என்றனர்.