Published : 24 May 2021 04:43 PM
Last Updated : 24 May 2021 04:43 PM

கோயில்கள் தொடர்பான பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கைகளைப் பதிவு செய்ய புதிய இணையவழி திட்டம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

அமைச்சர் சேகர்பாபு: கோப்புப்படம்

சென்னை

கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளைப் பதிவு செய்திட ஏதுவாக 'கோரிக்கைகளைப் பதிவிடுக' எனும் புதிய இணையவழி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 24) வெளியிட்ட அறிக்கை:

"இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், மனைகள், மற்றும் கட்டிடங்கள் பெருமளவில் உள்ளன. இவற்றின் வாடகைத் தொகை, குத்தகைத் தொகை மற்றும் குத்தகை நீட்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் வரப் பெறுகின்றன.

மேலும், திருக்கோயில்களின் திருப்பணிகள், திருவிழாக்கள் மற்றும் இதர வைபவங்கள் குறித்தும், பக்தர்களும் பொதுமக்களும் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி திருக்கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், தங்களது கோரிக்கைகளைப் பதிவு செய்திட ஏதுவாக 'கோரிக்கைகளைப் பதிவிடுக' எனும் ஓர் புதிய திட்டம் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளமான hrce.tn.gov.in–ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் 'கோரிக்கைகளைப் பதிவிடுக' எனும் திட்டத்தினைப் பயன்படுத்தி, தங்களது கோரிக்கைகளைப் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கோரிக்கைகளைப் பதிவு செய்ய விரும்புவோர் தங்களது அலைபேசி எண் (கட்டாயம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி (கட்டாயம் அல்ல) ஆகியவற்றைக் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். கோரிக்கைகளை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேவைப்படின் ஸ்கேன் (Scan) செய்யப்பட்ட ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யலாம். கோரிக்கைகளைப் பதிவு செய்த பின்னர், தங்களது அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு ஓர் ஒப்புகை அட்டை அனுப்பப்படும். தங்களது கோரிக்கைகள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்குத் தக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இணைய வழியாக அனுப்பப்படும்.

கோரிக்கைகளின் மீதான நடவடிக்கைகள் இந்துசமய அறநிலையத்துறை ஆணையரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும். அதுமட்டுமன்றி, கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் என்னால் விரிவாக ஆய்வு செய்யப்படும்.

சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகளின் மீது 60 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், ஒப்புகை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு எண்ணை உள்ளீடு செய்து கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த திட்டத்தினை நன்கு பயன்படுத்தி துறை மற்றும் திருக்கோயில்கள் செயல்பாட்டினை மேம்படுத்திட உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x