

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் செவிலியர் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (47). இவரது மனைவி எழிலரசி (40). குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல், இருமலால் அவதிப்பட்ட எழிலரசிக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எழிலரசியின் உடல்நிலை மோசமடைந்தது. உடனே, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எழிலரசி மாற்றப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட எழிலரசி சிகிச்சை பலனின்றி இன்று (மே 24) பரிதாபமாக உயிரிழந்தார். எழிலரசியின் உடல் கரோனா விதிக்கு உட்பட்டு பேரணாம்பட்டு நகராட்சி ஊழியர்கள் மூலம் அடக்கம் செய்யப்பட்டது.