தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்; தூத்துக்குடியில் வெறிச்சோடிய சாலைகள், கடைகள்: வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைப்பு

தூத்துக்குடி விவிடி சந்திப்பு பகுதியில் முழு ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றியவர்களை எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை விடுத்தார். படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி விவிடி சந்திப்பு பகுதியில் முழு ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றியவர்களை எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை விடுத்தார். படம்: என்.ராஜேஷ்
Updated on
2 min read

தளர்வில்லாத முழு ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று கடைகள் அனைத்து முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசியத் தேவையின்றி சாலையில் சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 10-ம் தேதி முதல் நேற்று வரை பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது. ஆனால், கரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை.

இதையடுத்து இன்று (மே 24) முதல் ஒரு வார காலத்துக்கு எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் இந்த தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள் ஏதுவும் திறக்கப்படவில்லை. காய்கறி, மளிகை, மீன், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

ஒருசில மருந்துக் கடைகள் மற்றும் பால் கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்திருந்தன. இதேபோல் வாகனங்கள் எதுவும் இயங்காததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

தளர்வில்லா முழு ஊரடங்கை மீறி சிலர் இருச்சக்கர வாகனங்களில் வெளியே நடமாடினர். அத்தியாவசிய காரணம் மற்றும் இ-பதிவு, இ-பாஸ் போன்றவை இல்லாதவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்தனர்.

வழக்குப்பதிவு செய்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அடையாள அட்டைகளுடன் இருச்சக்கர வாகனங்களில் சென்றனர்.

ஆனால் அவர்கள் இருச்சக்கர வாகனங்களில் செல்லக்கூடாது. நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் நான்கு சக்கர வாகனங்களில் தான் பணிக்கு செல்ல வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் தூத்துக்குடியில் நேற்று தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பலர் இருச்சக்கர வாகனங்களில் சென்றனர். அவர்களை போலீஸார் வழிமறித்து முதல் நாள் என்பதால் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

நாளை முதல் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் நான்கு சக்கர வாகனங்களில் தான் செல்ல வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தினர்.

தளர்வில்லா முழு ஊரடங்கை முன்னிட்டு காவல் துறையினரின் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தூத்துக்குடி வி.வி.டி சந்திப்பு மற்றும் குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: தளர்வில்லாத முழு ஊரடங்கை அமபடுத்தும் பணியில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி நகரில் 23 இடங்களிலும், மாவட்டத்தில் 64 இடங்களிலும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. தேவையில்லாமல் வெளியே செல்எவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த ஒரு வார காலத்துக்கு பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்றார் எஸ்பி. இந்த ஆய்வின் போது ஏடிஎஸ்பி கோபி, தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், வடபாகம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in