Published : 24 May 2021 03:38 PM
Last Updated : 24 May 2021 03:38 PM

தொற்றாளர்கள் நேரடியாக மருத்துவமனைக்கு வரவேண்டாம்; ஸ்க்ரீனிங் சென்டருக்கு வந்தால் படுக்கைகளை எளிதாக ஒதுக்க முடியும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை

''தொற்று பாதித்த பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் செல்வதால் இட நெருக்கடி, தேவையற்ற அலைச்சல் ஏற்படும். மாறாக ஸ்க்ரீனிங் மையத்துக்குச் சென்றால் அங்கு அவரது உடல்நலனைப் பொறுத்து மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்படும்'' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டி கிங்ஸ் மையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் 650 படுக்கைகள் இருந்ததில் தற்போது கூடுதலாக 104 ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்கி இருக்கிறோம். முதல்வர் அறிவுறுத்தல் அடிப்படையில் கூடுதல் நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிய படுக்கைகள் அனைத்து மாவட்டங்களிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

சென்னையைப் பொறுத்தவரை கரோனா சிகிச்சை மையங்களில் 6,000 படுக்கைகள் இப்போதும் காலியாக உள்ளன. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நந்தம்பாக்கம் வர்த்தக மையம், ஈஞ்சம்பாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, திருவிக நகர் டான்போஸ்கோ போன்ற பல இடங்களில் 500க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் காலியாக உள்ளன.

கூடுதலாக சித்த மருத்துவ மையங்கள் ஏறத்தாழ 37 இடங்களில் திறந்து வைக்கப்பட்டு சிறப்பாகச் செயல்படுகின்றன. புதிதாக போரூர் மற்றும் வேப்பேரி பெரியார் திடலிலும் ஒரு மருத்துவ மையம் தயாராகி வருகிறது. சித்தா மருத்துவ மையத்திலும் 200க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன.

பொதுமக்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள். மக்கள் சோதனை செய்த பிறகு தொற்று உறுதியானால் ஸ்க்ரீனிங் மையத்துக்குச் சென்றால் அங்கு அவர்களது உடல்நலனைப் பொறுத்து தேவையான மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்படும். ஆகவே, மருத்துவமனைக்கு நேரடியாகச் செல்வதைத் தவிர்த்து ஸ்க்ரீனிங் சென்டருக்குச் செல்லலாம்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முன் பூஜ்ஜிய காத்திருப்பு படுக்கைகள் உள்ளன. இதற்காகத்தான் பொதுமக்கள் நேரடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல் ஸ்க்ரீனிங் மையத்துக்குச் சென்றால் எந்த மருத்துவமனை எனப் பிரித்து அனுப்ப எளிதாக இருக்கும். ஆகவே, ஸ்க்ரீனிங் சென்டருக்குப் பொதுமக்கள் செல்லவேண்டும்.

ஆம்புலன்ஸில் மருத்துவமனை வாசலில் நோயாளிகள் காத்திருக்கும் நிலையைத் தவிர்க்க பூஜ்ஜிய காத்திருப்பு படுக்கைகள் சென்னையில் உள்ளதுபோல், கோவையில் உள்ளதுபோல் தமிழகம் முழுவதும் உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அது அனைத்து மருத்துவமனைகளிலும் அமைக்கப்பட உள்ளது”.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:

“தமிழகத்தில் 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை இருக்கிறது. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது அரசு. இதற்காகத் தொழில்துறை உடன் இணைந்து பணிகள் நடக்கின்றன. அதிகாரிகள் அதைக் கண்காணிப்பு செய்கிறோம்.

சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் பயன்பாட்டிற்காகக் கொடுக்கப்பட்ட 100 படுக்கைகளில், முன்களப் பணியாளர் என அறிவிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு 25 ஆக்சிஜன் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன”.

இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x