

பல் மருத்துவம் படிக்கும் தனது மகனுக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த திருச்சியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணி குறித்து ‘தி இந்து’ வில் கடந்த 2-ம் தேதி செய்தி வெளியானதைத் தொடர்ந்து கத்தார் நாட்டில் பணியாற்றி வரும் ‘தி இந்து’ வாசகர் ஒருவர் ரூ.60 ஆயிரத்தை கல்லூரிக்கு செலுத்தி அந்த மாணவர் படிப்பை தொடர உதவியுள்ளார்.
திருச்சி மேலக் கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். தன் வயதான தாய், மனைவி, மகன் சந்தோஷ்குமார், மகள் சினேகா ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது மகன் சந்தோஷ்குமார் மதுரையில் உள்ள பெஸ்ட் பல் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு ஆண்டுக் கல்விக் கட்டணமான ரூ.2 லட்சத்தில் ரூ.1.15 லட் சத்தை தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத் துறை செலுத்துகிறது. மீதமுள்ள தொகையான ரூ.85 ஆயிரத்தை செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டார்.
இதைக் கேள்விப்பட்ட திருச்சி மக்கள் சக்தி இயக்க நிர்வாகி நீலமேகம், சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ரூ.25 ஆயிரத்தை அளித்தனர். மேற்கொண்டு பணத்தை திரட்ட முடியாததால், இந்த ஆண்டு தனது மகன் தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என மிகுந்த கவலையில் இருந்தார்.
இந்தநிலையில், இவரது நிலை தொடர்பான செய்தி ‘தி இந்து’வில் டிச.2-ம் தேதி வெளியானது. இந்த செய்தியைப் படித்த ‘தி இந்து’ வாசகர்கள் பலரும் அவருக்கு உதவ முன்வந்தனர். இதில் குறிப்பாக கத்தார் நாட்டில் பணியாற்றி வரும் திருநெல்வேலியைச் சேர்ந்த வாசகர் ஒருவர் இணையதளத்தில் இந்த செய்தியைப் படித்துவிட்டு, தான் ரூ.60 ஆயிரத்தை செலுத்துவதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவர் இந்த தொகையை கல்லூரியின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி, மாணவர் சந்தோஷ்குமாரின் கட்டணத்தில் வரவு வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற வேண்டுகோளு டன் ‘தி இந்து’விடம் பேசிய அந்த வாசகர், “நாங்கள் கஷ்டப்பட்டுதான் சம்பாதிக்கிறோம். ஆனால், இது போன்று படிப்பதற்கு கஷ்டப்படுவோ ருக்கு உதவிகள் செய்வது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அந்த மாணவரை நன்றாகப் படித்து, ஏழைகளுக்கு உதவச் சொல்லுங்கள்” என்றார்.
இதுகுறித்து மாணவர் சந்தோஷ் குமாரின் தந்தை சுப்பிரமணி கூறியபோது, “குறைந்த வருமானத் துடன் வாழ்க்கையை நகர்த்தி வரும் நிலையில், என் மகன் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது என் சக்திக்கு மீறியதுதான். கட்டணம் செலுத்த முடியாததால் தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரும் கவலையுடன் இருந்தோம். இந்த நிலையில், ‘தி இந்து’ வாசகரின் பெருந்தன்மையாலும், உதவும் குணத்தாலும் என் மகன் தொடர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக ‘தி இந்து’வுக்கும், பெயரைத் தெரிவிக்க விரும்பாமலேயே உதவிய ‘தி இந்து’ வாசகருக்கும் நன்றி என எங்களின் உணர்வுகளை ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது” என்றார் நெகிழ்ச்சியுடன்.