காட்பாடி - சித்தூர் சாலை ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. | படம்: வி.எம்.மணிநாதன்.
காட்பாடி - சித்தூர் சாலை ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. | படம்: வி.எம்.மணிநாதன்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்; மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

Published on

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கியச் சாலைகள் இன்று வெறிச்சோடிக் காணப்பட்டன. மாவட்டம் முழுவதும் 134 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்துக் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பரவலைக் குறைக்க மே 24-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை, தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி, கடந்த 2 நாட்களாகச் சுற்றித் திரிந்த பொதுமக்கள் இன்று (மே 24) முதல் வீடுகளில் முடங்கினர்.

இதனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கியச் சாலைகள் அனைத்தும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஜவுளி மற்றும் நகைக்கடைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன.

முழு ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து பால், மருந்து, குடிநீர் போன்றவற்றைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. நேரக் கட்டுப்பாடுகளுடன் உணவகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்துக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கும் இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்துகள் இன்று அதிகாலை முதல் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி, பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலபள்ளி சோதனைச்சாவடி, வேலூர் அடுத்த பிள்ளையார் குப்பம் உள்ளிட்ட அனைத்து எல்லைகளும் தடுப்பு வேலிகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மாநில எல்லையோர சோதனைச்சாவடிகளில் காவல் துறை மற்றும் சுகாதாரத் துறையினர் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்களில் இ-பதிவு உள்ளதா? என்பதை சோதனை செய்த பிறகே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

அதேபோல், வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி, பாகாயம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, அணைக்கட்டு உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டன. மருத்துவமனைகள், மருந்தகம், பணி நிமித்தமாக வெளியே செல்பவர்கள் பெரும்பாலானோர் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றிச் சென்றனர்.

ஒருசில இடங்களில் அத்தியாவசியத் தேவைக்காக வெளியே வந்தவர்களுக்குக் காவல் துறையினர் அபராதம் விதித்தனர். முகக்கவசம் அணிந்திருந்தாலும், வாகனத்துக்குக் காப்பீடு இல்லை, தலைக்கவசம் அணியவில்லை, அதிவேகம் என ஏதாவது ஒன்றை கூறி வாகன ஓட்டிகளிடம் இருந்து காவல் துறையினர் கட்டாயமாக அபராதத் தொகையை வசூலித்தனர். காவல் துறையினரின் இத்தகைய செயல் வாகன ஓட்டிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்த்து வீடுகளிலேயே இருக்கும்படி காவல் துறையினர் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பல்வேறு இடங்களில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பெரும்பாலான பொதுமக்கள் தங்களது வழக்கமான செயல்பாடுகளில் ஈடுபட்டனர். வேலூரில் பொதுமக்கள் பலர் தெருக்களிலேயே நடைப்பயிற்சி மேற்கொண்டனர். முக்கிய சாலை சந்திப்புகளில் 900 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் 57 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டது. தேவையில்லாமல் வெளியே வரும் வாகன ஓட்டிகளைக் காவல் துறையினர் அரபாதம் விதித்து எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர். அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் 44 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் மருந்தகம், பால் விநியோகம், குடிநீர் ஆகியவை மட்டும் தடையின்றிக் கிடைத்தன. நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகைப் பொருட்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்ததால் முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. திருப்பத்தூர் எஸ்.பி.விஜயகுமார் தலைமையில் 650 காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 33 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அவசியம் இல்லாமல் வெளியே வந்தவர்களைக் காவல் துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பினர். கடைகள் மூடப்பட்டிருந்தால் சாலைகள் ஆட்கள் நடமாட்டமின்றிக் காணப்பட்டன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பால், உணவகம் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கின. ராணிப்பேட்டை எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் 550 காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் கடுமையாக்கப்பட்டன. அவசியம் இல்லாமல் வெளியே சுற்றியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in