

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி வரும் ஜனவரி 5-ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
நவம்பர் மாத இறுதியிலும், டிசம்பர் மாத தொடக்கத்திலும் தமிழகம் முழுவதும் பெருமழை பெய்தது. இதனால் சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. இந்த ஏரியிலிருந்து உரிய நேரத்தில் நீரை வெளியேற்றாமல், முன்னறிவிப்பின்றி ஒரே நேரத்தில் அதிக அளவு நீரை திறந்துவிட்டதால் சென்னை மாநகரமே நீரில் மூழ்கியது.
இதனால் ஏராளமானோர் பலியானதோடு, கோடிக் கணக்கில் சொத்து இழப்பும் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, உறவினர் வீடுகளில் தங்கும் நிலை ஏற்பட்டது.
இந்த அளவு பெரும் சேதத்துக்கு அதிமுக அரசின் தாமதமும், நிர்வாகக் கோளாறுமே காரணம் என அனைத்துக் கட்சியினரும் குற்றம்சாட்டினர். ஆனாலும் இதற்கு முதல்வர் எந்த விளக்கமும் அளிக்க முன்வரவில்லை.
எனவே, இந்த பெரும் அழிவுக்கு காரணமானவர் யார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த நீதி விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார். ஆனாலும் இதுவரை நீதி விசாரணை ஆணையம் எதுவும் அமைக்கப்படவில்லை. அதுபோல வெள்ள நிவாரண உதவிகள் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடத்தப்படுகின்றன.
இவற்றை கண்டித்து சென்னை மாநகரில் வரும் ஜனவரி 5-ம் தேதி திமுக சார்பில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.