Published : 24 May 2021 12:55 PM
Last Updated : 24 May 2021 12:55 PM

அதிக அளவில் தடுப்பணைகளைக் கட்டி நீரைத் தேக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுரை

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

சென்னை

நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 24) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து துறையின் உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதல் நாளான இன்று மதுரை மண்டலம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மதுரை மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் திட்டப் பணிகள், தாமிரபரணி கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் முன்னேற்றம், செப்பனிடுதல், புனரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஏரிகள் புனரமைப்புப் பணிகள், உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் மற்றும் அணைகள் புனரமைப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் நடைபெறும் பணிகள், கால்வாய்கள், ஏரிகள், அணைக்கட்டுகள், புனரமைப்புப் பணிகள், தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள், தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பதினெட்டாம் கால்வாய் சீரமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் ஆகியோர் நீர் ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில், புதிய தடுப்பணைகள், புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் செப்பனிடப்படாமல் இருக்கும் நீர்நிலைகளுக்கு முன்னுரிமை வழங்கி திட்டப் பணிகளை அங்கு செயல்படுத்திட ஆய்வு மேற்கொண்டு விரைவில் அறிக்கை வழங்குமாறு நீர்வளத்துறை அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

பருவமழைக் காலங்களில் வெள்ள நீர் வீணாகாமல் கடலில் கலப்பதைத் தடுத்து அதிக அளவில் தடுப்பணைகளைக் கட்டி நீரைத் தேக்கவும், தேக்கப்பட்ட நீரை முறையாகக் குடிநீர் மற்றும் விவசாயத்திற்குப் பயன்படுத்திடவும், கள ஆய்வு செய்து விரிவான அறிக்கை வழங்கிட உயர் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

நாளை கோயம்புத்தூர் மண்டலமும், சென்னை மண்டலமும் ஆய்வு செய்யப்பட உள்ளன".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x