பறை இசையை பரவலாக்க புதிய சொற்கட்டு: ஆராய்ச்சியோடு பயிற்சியும் அளிக்கும் இளைஞர் குழு

பறை இசையை பரவலாக்க புதிய சொற்கட்டு: ஆராய்ச்சியோடு பயிற்சியும் அளிக்கும் இளைஞர் குழு
Updated on
2 min read

உலகம் முழுவதும் பறை இசையைப் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர்கள், புதிய சொற்கட்டுகள் (கீ நோட்) உருவாக்கியதுடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பயிற்சிப் பட்டறை நடத்தி வருகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய நடன மான பறையாட்டம் உணர்ச்சியும் எழுச்சியும் மிக்கது. அதிர்ந்தெழும் பறையிசை- ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை ஒரே நேர்கோட்டில் இணைக்கும் சக்தி கொண்டது. தமிழகத்தில் ஒவ்வொரு ஊர்களிலும் அவர்கள் மொழி வழக்குக்கு ஏற்றவாறு பறை இசைக்கு சொற்கட்டுகள் உள்ளன.

இவை, ‘டன்டனக்கு டனக் குனக்கு, டன் டன் டன் டன்டனக்கு', ‘ரக்கட்ட ரக்கட்ட ரக்கட்ட, ரண்டக்க ரண்டக்க ரண்டக்க' என்ற வகையில் இருக்கின்றன.

கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசை ஆகியவற்றுக்கு இருப்பது போல சொற்கட்டுகளை (கீ நோட்) பறை இசைக்கும் அமைக்கும் முயற்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர் கோவை ‘நிமிர்வு’ கலையகம் பறை இசை பயிற்சிப் பள்ளியினர்.

பயிற்றுநர் சக்தி.

எம்.சி.ஏ. படித்த சக்தி என்ற இளைஞர், பறை இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் இதை தொடங்கினார். தற்போது வெப் டிசைனிங் தொழில் செய்யும் இவருடைய நண்பர்கள் ஞாட்பன்சிவா, ஹரிதாஸ், மதியவன் உள்ளிட்ட சிலர் இவருடன் இணைய, பறை இசைக்கு கணிதம் மற்றும் தமிழை அடிப்படையாகக் கொண்டு புதிய சொற்கட்டுகளை உருவாக்கி உள்ளனர்.

அவற்றை, “த-குகுகு த-குகுகு த-குகுகு த த, தகுகு தகுகு”, “தீம் தீம் தகுகு தகு, தீம் கு தகுகு தகுகு தகு” என எளிமையாக அனைவரும் கற்றுக் கொள்ளும் வகையில் அமைத்துள்ளனர்.

இது குறித்து ‘நிமிர்வு’ கலை யகத்தின் பயிற்றுநர் சக்தி கூறிய தாவது: தமிழர்களின் தாளக் கருவி யான பறை இசை ஒலிக்கும்போது ஆடாதவரும் ஆடுவர். படித்து விட்டு பறை இசைத்த எனக்கு என் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந் தது. இன்றைக்கும் கற்கும் பல ருக்கு இதே நிலைதான். அதை யெல்லாம் தாண்டி இதில் நானும் நண்பர்களும் மேற்கொண்ட ஆய்வுகளின் விளைவாக தற்போது எளிமையான சொற்கட்டுகளை உருவாக்கியுள்ளோம்.

மேலும், அந்தச் சொற்கட்டுகளை நாளுக்கு நாள் செழுமைப்படுத்தி வருகிறோம். சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங் களில் பயிற்சி பட்டறை நடத்தியுள் ளோம். பாமரர்கள் மட்டும் இசைத்த பறை இப்போது படித்தவர்கள் தோளிலும் தொங்குகிறது.

உழைப்புக்கு கிடைத்த வெற்றி

சமூக வேறுபாடின்றி படித்த இளைஞர்கள், பெண்கள், குழந்தை கள் எனப் பலரும் பயிற்சிக்கு ஆர்வமுடன் வருவதே எங்களின் முயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என்று கூறினார்.

மேலும், ‘எதிர்காலத்தில் ஒரே சொற்கட்டு என்ற நிலைக்கு வரும் போது பறை இசை எளிதாக உலகம் முழுவதும் பரவிவிடும்’ என்ற அவர், ‘அது மிகப் பெரிய பயணம் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அதில் முதல் அடியை நாங்கள் எடுத்து வைத் துள்ளோம் என்பதில் பெருமை யடைகிறோம்’ என்றார்.

எதிர்காலத் தில் தங்களது கனவு நனவாகும், பறை இசை அடுத்த கட்டத்துக்குச் செல்லும் என்ற நம்பிக்கை அவரது கண்களில் மின்னியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in