

கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் இன்று(மே 24) முதல் ஒரு வாரத்துக்குஎவ்வித தளர்வும் இல்லாமல்முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள், அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் குழுவுடனும் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அதையடுத்து, தமிழகம் முழுவதும் 24-ம் தேதி (இன்று) முதல் ஒரு வாரத்துக்கு எவ்வித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, தளர்வில்லா முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வருகிறது. அத்தியாவசியத் தேவைகளான மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள், பால் விநியோகம், குடிநீர்மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள்,பழங்கள் சென்னை மாநகரில் தோட்டக்கலைத் துறை மூலமாகவும், மற்ற மாவட்டங்களில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுடனும் இணைந்து வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.
சென்னையில் தலைமைச் செயலகமும் மாவட்டங்களில் அத்தியாவசிய துறைகளும் மட்டும் செயல்படும். தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்.
காலை 8 முதல் மாலை 6 மணிவரை மின்னணு சேவைக்கு (இ-காமர்ஸ்) அனுமதி உண்டு. உணவகங்களில் காலை 6 முதல்10 மணி வரை, பகல் 12 முதல் 3 மணிவரை, மாலை 6 மணி முதல் இரவு9 மணி வரை பார்சல் சேவைக்குமட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மின் வணிகம் மூலம் உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் இந்த நேரங்களில் செயல்படலாம். பெட்ரோல், டீசல் பங்க்குகள்,ஏடிஎம் சேவை அனுமதிக்கப்படும்.
வேளாண் விளை பொருட்கள்,இடுபொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும்,சரக்கு வாகனங்கள் செல்லவும்அனுமதி தரப்பட்டுள்ளது. மருத்துவம், இறப்புக்காக மட்டும் இ-பதிவுடன் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லலாம். கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் முழு ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.