Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 03:10 AM

தினமும் காலை 6 முதல் பகல் 12 மணி வரை 4,380 வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை

முழு ஊரடங்கு காலத்தில் தினமும் காலை 6 முதல் பகல் 12 மணி வரை பொதுமக்களுக்கு 4,380 வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. ஊரடங்குகாலத்தில் பொதுமக்களுக்கு காய்கறிமற்றும் பழங்கள் விற்பனை செய்வதுதொடர்பாக அதிகாரிகளுடன் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இதில் வேளாண் உற்பத்தி ஆணையர்கே.கோபால், வேளாண் - உழவர்நலத்துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் க.வீ.முரளிதரன் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தின் தினசரி காய்கறி,பழங்கள் தேவை சுமார் 18 ஆயிரம் மெட்ரிக் டன் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு தினமும் 1,500 மெட்ரிக் டன்காய்கறிகள், பழங்கள் தேவைப்படும். சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் 1,610 வாகனங்கள் மூலம் தினமும் 1,160 மெட்ரிக் டன் அளவுக்கு காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் 2,770 வாகனங்கள் மூலம் 2,228 மெட்ரிக் டன் அளவுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை 6 முதல் பகல் 12 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறிமற்றும் பழங்கள் விநியோகம் செய்யப்படும்.

இப்பணிகளுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து விநியோகம் செய்யப்படும். காய்கறி விநியோகம் தொடர்பான தகவல்களை 04422253884 என்ற தொலைபேசி எண்ணில்தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இப்பணிகளை கண்காணிக்க தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண்மை விற்பனைத் துறை சார்ந்த அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் 194 குளிர்பதன கிடங்குகளில் 18,527 மெட்ரிக் டன் கொள்ளளவு இடங்கள் உள்ளன. அதில் தற்போது சுமார் 3 ஆயிரம் மெட்ரிக் டன் இடங்களில் மட்டுமே விளைபொருட்கள் சேமிப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 15,527 மெட்ரிக் டன் கொள்ளளவை அருகில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேமித்து வைக்கலாம்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x