Published : 24 May 2021 03:10 am

Updated : 24 May 2021 06:08 am

 

Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 06:08 AM

இன்று முதல் தளர்வில்லா ஊரடங்கு அமல்; திருவிழா கூட்டம் போல கடைகளில் குவிந்த மக்கள்: காய்கறி விலை கடும் உயர்வு

lockdown
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஒரு வார ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால், நேற்று ஒருநாள் மட்டும் பொதுமக்கள் பொருட்களை வாங்கி சேமித்து கொள்வதற்காக கடைகள் காலை முதல் இரவு வரை திறக்கப்பட்டிருந்தன. பொருட்களை வாங்க சென்னை கொத்தவால்சாவடி மார்க்கெட்டில் திரண்டிருந்த பொதுமக்கள்.படம் க.பரத்

சென்னை

தமிழகம் முழுவதும் இன்று முதல் தளர்வில்லா ஊரடங்கு தொடங்குவதை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக நேற்று கடைவீதிகளில் மக்கள் திரண்டனர். அனைத்து நகரங்களிலும் கடைவீதிகள் திருவிழாக் கூட்டம்போல காணப்பட்டன. வியாபாரிகள் காய்கறி விலைகளை கடுமையாக உயர்த்தி விற்பனை செய்தனர்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று முதல்ஒரு வாரத்துக்கு எவ்வித தளர்வுகளும்இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி, அனைத்து கடைகளும் நேற்று திறந்திருந்தன. இதனால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் கூட்டம் அலைமோதியது. கரோனா அச்சமின்றி, சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் நடமாடினர்.


சென்னையில் சைதாப்பேட்டை, அரும்பாக்கம், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பெரம்பூர் உள்ளிட்ட காய்கறி சந்தைகளில் காலையிலேயே அதிக அளவில் மக்கள் குவிந்திருந்தனர்.

கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை வியாபாரிகள் அதிக அளவில் குவிந்தனர். வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. மொத்த விற்பனை விலையில் பெரிய வெங்காயம் ரூ.40 தக்காளி ரூ.50, பீன்ஸ் ரூ.180, உருளைக்கிழங்கு ரூ.30, கத்தரிக்காய், வெண்டைக்காய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30 என விலை உயர்ந்திருந்தது.

இரு வாரங்களாக வெறிச்சோடிக் கிடந்த தி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் துணி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல தமிழகம் முழுவதும் கடைவீதிகளில் திருவிழா கூட்டம் போல மக்கள் திரண்டிருந்தனர்.

கோவையில் டவுன்ஹால், ராஜ வீதி, ரங்கே கவுடர் வீதிகளில் உள்ள மொத்த சரக்கு கடைகள், அண்ணா மார்க்கெட், சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் காய்கறி, மளிகை பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் திரண்டனர். நகைக் கடைகள், துணிக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

திருப்பூரில் நேற்று முன்தினம் கிலோ ரூ.60-க்கு விற்ற வெண்டைக்காய், நேற்று ரூ.100-க்கும், ரூ.50 வரை விற்றகத்தரிக்காய் ரூ.100-க்கும் விற்பனையானது. சேலம் செவ்வாய்பேட்டை பால்மார்க்கெட், அம்மாப்பேட்டை சின்னக்கடை வீதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மளிகை, அரிசி உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர். ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கடை வீதிகளில் நேற்று மக்கள் அதிக அளவில் திரண்டனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகள் சார்பில்காய்கறிகள் வாகனங்களில் விற்பனைசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும், காய்கறி கடைகளில் மக்கள் குவிந்தனர்.

மதுரையில் மாசி வீதிகள், நெல்பேட்டை, விளக்குத்தூண், நேதாஜி ரோடு,தெற்குவாசல் உட்பட நகரின் பெரும்பாலான இடங்களில் சித்திரை திருவிழாவில் கூடுவதுபோல் மக்கள் கூட்டம் இருந்தது. ஜவுளிக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

விருதுநகர், திண்டுக்கல், தேனி,ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் கடை வீதிகளிலும், மார்க்கெட் பகுதிகளிலும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

3 மடங்கு உயர்வு

திருச்சி மேலரண் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட், உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் 3 மடங்கு அதிகம் விலை வைத்து விற்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.

இதேபோல, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கரூர், அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களிலும் காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்க கடைவீதி, மார்க்கெட்களில் அதிகளவில் மக்கள் திரண்டனர்.


தளர்வில்லா ஊரடங்கு அமல்திருவிழா கூட்டம்கடைகளில் குவிந்த மக்கள்காய்கறி விலை கடும் உயர்வுLockdown

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x