

மீன்பிடிக்கச் சென்று மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட 12 மீனவர்களை விரைவில் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் டவ் தே புயல்அரபிக்கடலில் மையம் கொண்டுகுஜராத் அருகே கரையைக் கடந்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இதில் சிக்கி குமரி மாவட்ட மீனவர்கள் உட்பட பலர் மாயமானார்கள். இதைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பைபோர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சபிஷ் என்பவருக்கு சொந்தமான அமீர்ஷா என்ற பெயர் கொண்ட மீன்பிடி விசைப் படகில் 16 மீனவர்கள் கடந்த 5-ம் தேதி மங்களூரு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்களில் 12 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மற்ற 4 பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.
‘டவ் தே’ புயல் கடந்து சென்ற பிறகு, 16 மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாமல், அவர்கள் காணாமல் போய்விட்டதாக தகவல் பெறப்பட்டது. இதுதொடர்பாக இந்திய கடலோரக் காவல் படையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் மூலம் தேடுதல்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
காணாமல்போன மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது, அவர்களது குடும்பத்தினர், மீனவ சமுதாய மக்கள் இடையே பெரும் துயரத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.