

கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகொண்ட கரோனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேற்று திறந்துவைத்தார்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
கோவையில் கரோனா தொற்றால்பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 3,944-ஆகஅதிகரித்தது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று 2,454 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிப்புக்குள்ளாகும் பெரும்பாலானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் கோவையிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு இருந்து வருகிறது.
இந்நிலையில், கோவை அரசு கலைக் கல்லூரியில் கிரெடாய் அமைப்பு மூலம் 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர்கள் அர.சக்கரபாணி, கா.ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேற்று மாலை திறந்துவைத்தார். இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் நாகராஜன், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.