

கொட்டிவாக்கத்தில் கார் குளத்தில் மூழ்கியதில் தாய் மற்றும் 2 மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை நீலாங்கரை அருகே சின்ன நீலாங்கரை குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன்(45). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி வெண் ணிலா (38). மகள் ரம்யா (20) சோழிங்க நல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2 ம் ஆண்டும், பவித்ரா (17) நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பிலும் படித்து வந்தனர்.
திருவான்மியூரில் உள்ள ஒரு தியேட்டரில் இரவுக் காட்சி படம் பார்க்க பாண்டியன் உட்பட 4 பேரும் காரில் சென்றனர். படம் முடிந்து இரவு 1 மணியளவில் அவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். காரை பாண்டியன் ஓட்டினார்.
கொட்டிவாக்கம் அருகே சென்னை பல்கலைக்கழக குடியிருப்பு சிக்னலில் வந்தபோது பெட்ரோல் போடுவதற்காக பாண்டியன் காரை சாலை ஓரமாக ஓட்டி சென்றார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து கார் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறிய கார், சாலை ஓரத்தில் இருந்த தாமரைக்கனி குளத்தில் விழுந்தது. சமீபத்தில் பெய்த மழையால் அந்தக் குளம் நிரம்பியிருந்தது.
பாண்டியன் மட்டும் கார் கதவை திறந்து வெளியே வந்து விட, மற்ற 3 பேரும் காருக்குள் சிக்கிக்கொண்டனர். கார் நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து 3 பேரும் பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் அடையாறு போக்குவரத்து பிரிவு மற்றும் சாஸ்திரி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த விதம் சில சந்தேகங்களை ஏற்படுத்துவதால் போலீஸார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.