Published : 23 May 2021 09:14 PM
Last Updated : 23 May 2021 09:14 PM

எட்டயபுரம் அருகே வாகன ஓட்டிகளின் பசியைப் போக்கும் இளைஞர்கள்: குவியும் பாராட்டு

எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு வழங்க உணவு பொட்டலங்களுடன் தயாராக நின்ற இளைஞர்கள்.

கோவில்பட்டி 

எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் வயிற்றுப் பசியைப் போக்க கிராமத்து இளைஞர்கள் உணவு பொட்டலங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்படும் ஊரடங்கில், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களாக லாரிகள், சுமை ஆட்டோக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், கோவை, ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து லாரிகள், கன்டெய்னர்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஹோட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதால், நெடுஞ்சாலைகளில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால், தொலைதூரத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிக்கொண்டு வரும் லாரி ஓட்டுநர்கள் உணவு, டீ உள்ளிட்டவைகள் கிடைக்காமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், மதுரை - தூத்துக்குடி தேசிய நான்குவழிச்சாலையில் எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தினமும் உணவு தயாரித்து 300 மதிய உணவு பொட்டலங்களை இலவசமாக வாகன ஓட்டிகளுக்கு வழங்கி வருகின்றனர்.

அவர்களின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சிந்தலக்கரை கிராம இளைஞரணி தலைவர் சாமி சுப்புராஜ் கூறும்போது, தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற தனது கவிதையால் உணர்வூட்டிய பாரதி பிறந்த மண்ணில் இருக்கிறோம்.

இதனால், உணவுக்காக யாரும் தவிக்க கூடாது, பசிப்பிணியுடம் யாரும் வாடக்கூடாது என்ற எண்ணத்தில் எங்கள் கிராமத்து இளைஞர்களை ஒருங்கிணைத்து அனைவரது பங்களிப்புடன் சாம்பார் சாதம் தயாரித்து முதலில் 100 பேருக்கு வழங்கினோம்.

இதனை அறிந்த வெளியூர், வெளிநாடுகளில் இருக்ககூடிய எங்கள் கிராமத்தை சேர்ந்த பலரும் எங்களுக்கு உதவிகள் செய்ய முன்வந்ததால் தற்போது 300 உணவு பொட்டலங்கள் தயார் செய்து தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், ஏழை எளியவர்களுக்கு வழங்கி வருகிறோம். அதன் கூடவே தண்ணீர் பாட்டில், பழம் ஆகியவையும் வழங்குகிறோம், என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x