

மதுரையில் திரும்பிய திசையெல்லாம் சித்திரைத் திருவிழா போல் மக்கள் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். ஊரடங்கு நெரிசலைப் பயன்படுத்தி காய்கறி விலை பத்து மடங்கு உயர்த்தி விற்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா 2-ம் அலை பரவல் அதிக அளவில் உள்ளது. கடந்த இரு வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கரோனா பரவல் குறைந்தபாடில்லை.
இதையடுத்த நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்துக்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்குவதற்காக நேற்றும், இன்றும் அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது.
அரசின் முழு ஊரடங்கு அறிவிப்பு நேற்று (சனிக்கிழமை) நண்பகலில் வெளியானது. இது தெரியாமல் வழக்கம் போல் காலை 10 மணிக்குக் கடைகளை மூடிவிட்டு வீடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் கடைகளைத் திறக்கவில்லை. மாலையில் பல கடைகள் திறக்கப்பட்டும் கூட்டம் அதிகமாக இல்லை.
இன்று காலை அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டன. காய்கறி மார்க்கெட்டுகள், மொத்த கடைகளில் காலை 6 மணி முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. எங்கும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை.
மதுரையில் மாசி வீதிகள், நெல் பேட்டை, விளக்குத்தூண், நேதாஜி ரோடு உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் சித்திரைத் திருவிழாவில் கூடுவதுபோல் மக்கள் கூட்டம் இருந்தது. துணிக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
அனைத்துச் சாலைகளிலும் வாகன நெரிசல் அதிகமாக இருந்தன. பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
காய்கறி விலை உயர்வு
காய்கறிகள் பத்து மடங்கு விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டது. கேரட், உருளைக் கிழங்கு, வெண்டைக்காய், கத்தரிக்காய் கிலோ ரூ.80-க்கும், பீன்ஸ் ரூ.200-க்கும் விற்கப்பட்டது.
கரோனாவால் மக்கள் வாழ்வாரத்தை இழந்து தவிக்கும்போது ஊரடங்கு கால நெருக்கடியைப் பயன்படுத்தி வியாபாரிகள் காய்கறிகள் விலையைப் பல மடங்கு உயர்த்திக் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மதுரை மாவட்ட ஓட்டல்கள் சங்கத் தலைவர் டெம்பிள் சிட்டி குமார் கூறுகையில், ''ஒரே நாளில் காய்கறி விலையை 10 மடங்காக உயர்த்தியுள்ளனர். இன்றோடு முடியப்போவதில்லை வாழ்க்கை. எனவே வியாபாரிகள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும். இவ்வளவு விலைக்கு காய்கறிகள் வாங்கி, தொழில் செய்யும் உணவக உரிமையாளர்கள் அனைவரும் நஷ்டத்தைச் சந்திப்பார்கள்'' என்றார்.
மதுரை சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் கூறுகையில், ''ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் காய்கறிகளைப் பயிரிட்டுள்ள விவசாயிகள் அன்று காய்கறிகளைப் பறித்து இரவில் மார்க்கெட்டிற்குக் கொண்டு வருவது வழக்கம். இந்த முறை தமிழக அரசு சனிக்கிழமை மதியத்துக்கு மேல், ஞாயிற்றுக் கிழமை கடை திறக்கலாம் என அறிவித்தது.
இதனால் பக்கத்து மாவட்டங்களிலிருந்து உடனடியாக காய்கறிகளைப் பறித்து மதுரைக்குக் கொண்டு வர முடியவில்லை. மதுரை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள காய்கறிகள் மட்டுமே நேற்று மார்க்கெட் கொண்டு வரப்பட்டது. 25 சதவீத காய்கறிகள் மட்டுமே வந்தன. தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்தது.
வியாபாரிகள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்து விலையை அதிகரிக்கவில்லை. தளர்வில்லாத ஊரடங்கு காலத்திலும் பால் விற்பனைக்கு அனுமதி வழங்குவது போல், காய்கறி விற்பனைக்கும் அரசு அனுமதிக்க வேண்டும்'' என்றார்.