

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து 1756 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே குமரியில் துவங்கியுள்ளதால் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை கன்னிப்பூ சாகுபடிக்கு கைகொடுத்துள்ளதால் விவசாயிகள் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குழித்துறையில் அதிகபட்சமாக 105 மிமீ., மழை பெய்திருந்தது.
கோழிப்போர்விளையில் 85 மிமீ., சிற்றாறு ஒன்றில் 68, களியலில் 70, பூதப்பாண்டியில் 28, கன்னிமாரியில் 37, மயிலாடியில் 70, நாகர்கோவிலில் 50, பேச்சிப்பாறையில் 52, பெருஞ்சாணியில் 78, புத்தன்அணையில் 77, சிவலோகத்தில் 67, சுருளகோட்டில் 28, குளச்சலில் 36, இரணியலில் 42, பாலமோரில் 31, மாம்பழத்துறையாறில் 57, அடையாமடையில் 59, குருந்தன்கோட்டில் 43, முள்ளங்கினாவிளையில் 88, ஆனைகிடங்கில் 44, முக்கடல் அணையில் 35 மிமீ., மழை பெய்திருந்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 52 மிமீ., மழை பதிவாகியிருந்தது.
கனமழையால் குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2040 பாசன குளங்களும் நிரம்பி மறுகால் பாய்ந்தன. மழையால் மாவட்டம் முழுவதம் 13 வீடுகள் இடிந்து விழுந்தன. கிள்ளியூர் வட்டத்தில் மட்டும் 6 வீடுகள் இடிந்தன. கனமழையால் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் மின்தடை ஏற்பட்டது. நேற்றும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.
நேற்று இரவில் இருந்து இன்று வரை தொடர்ச்சியாக கனமழை பெய்தது. பகலில் விட்டு விட்டு சாரல் பொழிந்தது. கனமழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 1929 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் நீர்மட்டம் 43.76 அடியாக உள்ளது. அணையில் இருந்து 475 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், மேலும் உபரியாக 1281 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பேச்சிப்பாறையில் இருந்து மொத்தம் 1756 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
அதிக தண்ணீர் வெளியேறி வரும் நிலையில் மழை நீருடன் கலந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆறு, மற்றும் பேச்சிப்பாறை அணை கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வள்ளியாறு, பழையாறு போன்றவற்றிலும் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 65.40 அடியாக உள்ள நிலையில் அணைக்கு உள்வரத்தாக 843 கனஅடி தண்ணீர் வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 12.2 அடியாக உயர்ந்துள்ளது. சிற்றாறு ஒன்றில் 14.27 அடி, சிற்றாறு இரண்டில் 14.36 அடி நீர்மட்டம் உள்ளது. மழை தொடர்ந்து வருவதால் அணை பகுதிகளில் பொதுப்பணித்துறை நீர்ஆதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.