

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நினைவிடம் ராமேசுவரத்தில் பேக்கரும்பு எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்தில் ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அப்துல் கலாம் மறைந்து 5 மாதங்களாகி விட்ட நிலையில், ஆரம்பத்தில் பாது காக்கப்பட்ட பகுதியாக இருந்த பேக்கரும்பு கலாம் நினைவிடம், மெல்ல மெல்ல தற்போது புறக்கணிப்புக்குள்ளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் உள்ளூர்வாசிகள். இதனால் கலாம் நினைவிடம் தற்போது கால்நடைகள், நாய்கள் உலவுமிடமாக மாறி வருகிறது.
கடந்த செப்டம்பர் 18-ம் தேதி ராமநாத புரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பில் உயர் மின்கோபுர விளக்கு (ஹைமாஸ் விளக்கு) மற்றும் நினைவிடத்தின் அருகில் ரூ. 12 லட்சம் மதிப்பில் நவீன பேருந்து நிறுத்தக் கூடம் அமைப்பதற்காக அ.அன்வர்ராஜா எம்.பி. அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15-க்குள் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஹைமாஸ் விளக்குகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும், அதைத் தொடர்ந்து பேருந்து நிலையமும் கட்டி முடிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால், கலாமின் 84-வது பிறந்தநாள் முடிவுற்று 2 மாதங்கள் ஆகியும், ஹைமாஸ் விளக்குத் தூண் அமைக்கப்பட்டும், விளக்குகளை அமைத்து அதற்கான மின்சார வசதி அளிக்கப்படவில்லை.
அதுபோலவே, கடந்த அக்டோபர் 15 கலாமின் பிறந்த நாளன்று, பேக்கரும்பு நினைவிடத்தில் கலாமுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். ஆனால் அறிவிப்பு வெளியாகி இரண்டு மாதங்களாகியும், அதற்கான எவ்வித பணிகளும் தொடங்கப்படவில்லை.
கலாம் நினைவிடத்தில் ஹைமாஸ் விளக்கு மற்றும் பேருந்து நிறுத்தக் கூடப் பணிகளை விரைந்து முடித்து, உடனே நினைவு மண்டபம் கட்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.