அனைத்து கடைகளும் திறப்பு; கோவில்பட்டியில் சமூக இடைவெளியின்றி கூடிய மக்கள்: காய்கறி விலை இருமடங்கு உயர்வு

கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம்
கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம்
Updated on
2 min read

கோவில்பட்டியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால், சமூக இடைவெளியின்றி மக்கள் கூடியதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (24-ம் தேதி) முதல் தளர்வு இல்லா ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதில், பால், ஆங்கிலம் மற்றும் தமிழ் மருந்து கடைகள் திறக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்றும், இன்றும் அனைத்து கடைகளும் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து கோவில்பட்டியில் நேற்று மாலை 4 மணி முதல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. ஆனால், 6 மணிக்கு மேல் மழை தூறல் விழுந்ததால் கூட்டம் அதிகமாக இல்லை.

இன்று காலை முதல் புறவழிச்சாலையில் உள்ள கூடுதல் புதிய பேருந்து நிலைய வளாகம், எட்டயபுரம் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகியவற்றில் இயங்கும் காய்கறி சந்தைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இதனால், புறவழிச்சாலை அருகே உள்ள அணுகுசாலை, எட்டயபுரம் சாலையோரங்களில் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து நின்றன.

காய்கறி சந்தை இயங்கும் வளாகங்களில் சமூக இடைவெளி சிறிதுமின்றி மக்கள் காய்கறிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினார். சிலர் முகக் கவசங்களையும் அணியாமல் இருந்தனர். அவர்களை கடைக்காரர்கள் எச்சரித்து, முகக்கவசம் அணியும்படி கூறினர்.

அதே போல், பிரதான சாலையில் உள்ள ஜவுளி கடைகளுக்கு ஏராளமானோர் திரண்டியிருந்தனர். மேலும், பாத்திரக்கடைகள், பேன்ஸி கடைகள், பெயின்ட் கடைகள், மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதனால், பிரதான சாலை, மாதாங்கோவில் சாலை, தெற்கு பஜார், தேரடி தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, காய்கறி சந்தை சாலை, இளையரசனேந்தல் சாலை என திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்று வண்ணம் இருந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் குவிந்த மக்கள்

காய்கறிகளின் விலையும் இரு மடங்காக உயர்ந்து காணப்பட்டது. ரூ.35-க்கும் விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் கிலோ ரூ.80- க்கு விற்கப்பட்டது. கிலோ ரூ.10-க்கு விற்பனையான தக்காளி ரூ.40, ரூ.65 க்கு விற்பனையான அவரைக்காய், ரூ.60-க்கு விற்கப்பட்ட பீன்ஸ், ரூ.25-ல் இருந்து கேரட் நேற்று கிலோ தலா ரூ.100-க்கு விற்பனையானது.

முட்டை இருப்பு இல்லை

கோவில்பட்டியில் நேற்று முதலே கோழி முட்டை தட்டுப்பாடு நிலவியது. இன்றும் காலையில் மொத்த கடைகளில் விரைவாக விற்று தீர்ந்தன. ஆனால், சில்லறை கடைகளில் முட்டை விற்பனை நடந்தது. சாதாரண கோழி முட்டையின் விலை கடந்த வாரம் ரூ.4.50-ம், கடந்த 2 நாட்களாக ரூ.5-ம், இன்று ரூ.5.50 என்று மொத்த கடைகளில் விற்பனையானது. இதே போல், இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பேருந்துகள் இயக்கம்

இன்று காலை முதல் அரசு பேருந்துகள் வழக்கமான நேரத்துக்கு இயங்கின. கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில், தென்காசி பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மற்ற வழித்தடங்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதே போல், பெரும்பாலான தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இது குறித்து சமூக ஆர்வலர் ப.சண்முகசுந்தரம் கூறும்போது, ஏற்கெனவே இருந்த ஊரடங்கால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. ஆனால், இன்று அளிக்கப்பட்ட தளர்வு, வரும்வாரும் இறுதியில் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்தவே செய்யும்.

இதற்கு பதில் கடந்த 18-ம் தேதி முதல் இன்று (23-ம் தேதி) வரை தளர்வு இல்லா ஊரடங்கு அறிவித்து செயல்படுத்தி இருந்தால், மாவட்டத்தில் கரோனா தினசரி புதிய பாதிப்பு கண்டிப்பாக 200-க்கும் கீழ் குறைந்திருக்கும். ஆனால், அரசு தாமதமாக அறிவித்த தளர்வில்லா ஊரடங்கு, அதற்கு முந்தைய 2 நாள் முழு தளர்வு கரோனா பாதிப்பை அதிகப்படுத்தவே செய்யும், என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in