கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை: 350 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை: 350 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது
Updated on
2 min read

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் 350 கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 9-ம் தேதி பெய்த கனமழை யால் சிதம்பரம், பண்ருட்டி, காட்டு மன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, வடலூர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதைத் தொடந்து கடந்த வாரம் முதல் பெய்துவரும் பலத்த மழையால் மீண்டும் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. நேற்று காலையில் இருந்து மாலை வரை விட்டுவிட்டு கனமழை பெய்தது. நேற்றிரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது.

இதனால் கடலூர், பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள் ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந் துள்ளது.

சாலை துண்டிப்பு

பூ.கொண்டலவாடி, ஊ.நெமிலி, களவானூர், குமாரமங்கலம் உள் ளிட்ட கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. கோவிலானூர் ஓடை உடைந்து விருத்தாசலம், வடலூர் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. என்எல்சி சுரங்கத்தில் தேங்கியிருந்த மழை நீரும் வெளி யேற்றப்பட்டது. அத்துடன் உளுந் தூர்பேட்டை பகுதியில் இருந்து வந்த தண்ணீரும் சேர்ந்து பரவ னாற்று ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை - கும்பகோணம் சாலை யில் இடுப்பளவுக்கு தண்ணீர் செல் கிறது. இதனால் நேற்றிரவு முதல் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உடைப்பு ஏற்பட்ட செங்கால் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அண்ணா நகர் அருகே ஓடையை தாண்டி வெள்ளம் வெளியேறியது. இதனால் அண்ணா நகர், மாருதி நகர், செல்லப்பன் பேட்டை, ராசா குப்பம், எல்லப்பன் பேட்டை, ராஜீவ்காந்தி நகர், ரெட்டிப்பாளை யம், அயர்ன் குறிஞ்சிப்பாடி, கல்குணம், பூதப்பாடி, மருவாய் உள்ளிட்ட கிராமங்களுக்குள் தண் ணீர் புகுந்தது. இதனால் ஆயிரக் கணக்கான கிராம மக்கள் உட னடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு

மாருதி நகரில் வெள்ளத்தில் சிக்கிய 23 பேரை தீயணைப்பு படையினர் படகில் சென்று மீட்டனர். பண்ருட்டி மேலிருப்பு கிராமத்தில் ஓடை உடைந்து சேமக்கோட்டை, கொளப்பாக்கம் கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பெண்ணாடம் அருகே ஓ.கீரனூரில் பெரிய ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை மீட்பு படையினர் மீட்டனர்.

விருத்தாசலம் அருகே உள்ள மூப்பனார் ஏரி நிரம்பி வழிகிறது. அந்த தண்ணீருடன் நெய்வேலி சுரங்க தண்ணீரும் சேர்ந்ததால் செம்பலாக்குறிச்சி, சித்தேரிகுப்பம் சுரங்கப்பாதை தண்ணீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக கடலூர் அருகே உள்ள வெள்ளப்பாக்கம் கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

நேற்று பெய்த கனமழையால் மாவட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மேடான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. பெருமாள் ஏரியும் நிரம்பி வருகிறது. வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. வெள்ளாற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. கடலூரில் அனைத்து நகர்களும் தண்ணீரில் மிதக்கின்றன. தொடர் மழை அறிவிப்பையடுத்து மீட்புப் பணிகளில் ஈடுபட ராணுவத்தினர் 180 பேர் கடலூர் வந்துள்ளனர்.

சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி, சேத்தியாத் தோப்பு உள்ளிட்ட பகுதிகள் பலத்தமழை பெய்து வருவதால் குடியிருப்புகளில் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்தால் கடலூர் மாவட்டம் வெள்ளநீரில் மிதக்கும் நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in