

கேரளாவில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் ‘டவ் தே’ புயலில் மாயமாகினர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆரோக்கிய ராபி, மகேந்திரன், கொட்டில்பாடைச் சேர்ந்த சகாய ஆன்றனி, அலெக்ஸாண்டர், ஆன்றனி, கடியப்பட்டினத்தை சேர்ந்த மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட 12 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 16 பேர் கேரளாவில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோழிக்கோட்டை சேர்ந்த சதீஷ் என்பவரின் `அஜிமிர்சா’ என்ற விசைப்படகில் கடந்த 5-ம் தேதி பெய்ப்பூர் மீன்பிடித் துறைமுகத்
தில் இருந்து கடலுக்கு சென்றனர். ஆழ்கடலில் 15 நாட்கள் வரை தங்கி மீன் பிடிக்கும் இவர்கள், அரபிக் கடலில் ‘டவ் தே’ புயல் எச்சரிக்கை வழங்கப்பட்டபோது எவ்வித தொடர்புமின்றி இருந்தனர். புயல் எச்சரிக்கை தகவல் கிடைக்கப் பெற்ற பிற மீனவர்கள் குஜராத், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநில மீன்பிடித் துறைமுகங்களில் கரைசேர்ந்தனர். ஆனால், இந்த 16 மீனவர்களும் இதுவரை கரைசேரவில்லை. இவர்கள் புயலில் சிக்கினார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ், தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் உள்ளிட்டோர் நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்திடம் மனு அளித்தனர். அதில், `கோவா முதல் மும்பை வரையுள்ள ஆழ்கடல் பகுதியில் இந்திய கப்பல் படையின் துணையுடன் ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரி உள்ளனர்.