

தமிழகத்தின் மொத்த நிலப்பகுதியில் குறைந்தபட்சம் 33 சதவீத காடுகள் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சர்வதேச உயிரி பல்வகைமை தினத்தையொட்டி, உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக நேற்று கருத்தரங்கு நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள வன ஆட்சிப் பணி அதிகாரிகளுடன் அவர் பேசினார்.
இதில் அமைச்சர் பேசும்போது, "தமிழகத்தில் 23 ஆயிரத்து 338 கிலோ மீட்டர் பரப்பளவில் இயற்கை காடுகள் உள்ளன. நாட்டின் 16 முக்கியமான வன வகைகளில், ஒன்பது வகைகளை தமிழகம் உள்ளடக்கியுள்ளது. நீலகிரி தார், சிங்கவால் குரங்கு ஆகிய அழியும் நிலையிலுள்ள விலங்குகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம். தென்னிந்தியாவில் காணப்படும் யானை, புலி வகையான விலங்குகள், தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பது மாநிலத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.
2050-க்குள் இயற்கையோடு இணக்கமாக வாழ்வது என்ற பார்வையுடன், பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டுக்கான தேசிய உத்திகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உயிரியல்பன்முகத்தன்மை சட்டம் - 2002 என்றவிரிவான சட்டத்தை இயற்றிய முதன்மை நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த காடுகள் வளர்ப்பு திட்டத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தின் தனி சிறப்புமிக்க இயற்கை வளங்களையும், பறவைகளையும், வன உயிர்களையும் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மொத்த நிலப்பகுதியில் குறைந்தபட்சம் 33 சதவீத காடுகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பல்லுயிரின பாதுகாப்பு குறித்தபுத்தகத்தை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வெளியிட, ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பெற்றுக்கொண்டார்.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல், மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா, காணொலி காட்சி வாயிலாகசுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கூடுதல் முதன்மை வனப் பாதுகாவலர், தமிழ்நாடு உயிரி பல்வகைமை வாரிய செயலாளர் மீட்டாபெனர்ஜி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.