சென்னை மாநகராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை மாநகராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர்மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு முகாம்களை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், சென்னை தேனாம்பேட்டை மண்டலம் டி.டி.கே.சாலையில் உள்ள எத்திராஜ் திருமண மண்டபத்தில், மாநகராட்சி சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 26 மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் அனைத்து மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தப்படும். மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.

இத்தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250 111 என்ற உதவி எண் மற்றும் 97997 99993 என்ற காணொலி உதவி எண்களின் வாயிலாக பதிவு செய்யலாம். இந்த உதவி எண்கள் மூலம்பதிவு செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமின் நாள், நேரம் மற்றும் இடம்போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும். பதிவு செய்த மாற்றுத் திறனாளிகள் வசிக்கும் இருப்பிடத்துக்கு அருகாமையில் தற்காலிகதடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும்.

மேலும்,மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஓரிடத்தில்இருந்து மற்றொரு இடத்துக்குசெல்ல இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் வீடு அல்லது மிக அருகில் இருக்கும் ஒரு இடத்தில் தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வீட்டுக்கு ஒரு மருத்துவ அலுவலர் தலைமையில் ஒரு செவிலியர் கொண்ட மருத்துவக்குழு சென்று பதிவு விவரங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர். அந்த ஆய்வின் அடிப்படையில் தற்காலிக மருத்துவ முகாம் அவர்கள் வீடுகளுக்கு அருகில் ஏற்படுத்தப்பட்டு விதிகள் படி தடுப்பூசி செலுத்தப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமின் தொடக்கவிழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், நகராட்சி நிர்வாக ஆணையர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in