

தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்துக்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் முதல் மளிகை மற்றும் காய்கறிக் கடைகளில் பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
ஊரடங்கு தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், 24-ம் தேதி (நாளை) முதல் ஒரு வாரத்துக்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் அனைத்தும் மூடப்படும். அரசு தோட்டக்கலைத் துறை மூலமாக காய்கறி, பழங்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தார்.
மேலும் நேற்று இரவு9 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் கடைகள் திறந்திருக்கும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல்3 மணியில் இருந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் ஏராளமான பொருட்களை அள்ளிச் சென்றனர். இதனால் கடைகள் பலவற்றில் கடும் நெரிசல் ஏற்பட்டது. சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வியாபாரிகள் சிலர் பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்தி விற்றனர்.
பல மளிகைக் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், பூண்டு, முட்டை, சமையல் மிளகாய் தூள் உள்ளிட்டவை விற்றுத் தீர்ந்தன. வாடிக்கையாளர்கள் பலர், தாங்கள் எதிர்பார்த்த நிறுவனங்களின் பொருட்கள் கிடைக்காமல், கிடைத்த நிறுவனத்தின் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
காய்கறிகளின் விலை உயர்வு
அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தை நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில், கையிருப்பில் இருந்தகாய்கறிகளை வாங்க சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சில்லறை வியாபாரிகள் அதிக அளவில் குவிந்தனர்.இதை பயன்படுத்திக்கொண்ட மொத்த வியாபாரிகள் சிலர் கிலோரூ.8-க்கு விற்கப்பட்ட தக்காளியை ரூ.40-க்கும், ரூ.20-க்கு விற்கப்பட்ட கேரட்டை ரூ.60-க்கும், ரூ.15-க்கு விற்ற வெங்காயத்தை ரூ.40-க்கும் விலையை உயர்த்தி விற்றனர்.
இது தொடர்பாக வியாபாரிகள் சிலர் கூறும்போது, “இன்று (மே 22) இரவு குறைவான அளவே சந்தைக்கு காய்கறிகள் வரும். அதுதான் மொத்த மாநகருக்கும் விற்பனைக்கு செல்லும். நிச்சயம் விலை அதிகமாக இருக்கும். பற்றாக்குறையும் ஏற்படும்” என்றனர்.