

விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கை வசதிகளுடன்கூடிய கரோனா சிகிச்சை மையத்தை, மாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன் முன்னிலையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்தார். பின்னர் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
அப்போது, கரோனா சிகிச்சை மையத்தில் போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்களை இருப்பு வைக்கவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தேவைக்கேற்ப பணியமர்த்தவும் அறிவுறுத்தினார். கிராமப்புறங்களில் வீட்டில் தனிமைப்படுத்துதலைக் குறைத்து, கரோனா மையத்துக்கு வரவழைத்து சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
தடுப்பூசி முகாம், கரோனா தடுப்பூசி பரிசோதனை முகாம்களை மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும், மார்க்கெட் பகுதிகளிலும் அதிக அளவில் நடத்துவதற்கும் அறிவுறுத்தினார். அதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிராமப்புறங்களில் தொற்று பரவும்போது, அனைவரும் அரசு மருத்துவமனைகளை நாடாமல் இருக்க அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே உரிய சிகிச்சை வசதிகளை ஏற்படுத்தவே இங்கு கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் குறைவதால் பரவல் குறைய வாய்ப்புள்ளது. மற்ற மாநிலங்களில் கரோனா பரவல் உச்சத்தில் சென்று குறைந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் குறிப்பாக கிராமப்புறங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்தால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து விரைவில் கிரையோஜெனிக் கண்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன. அவை வந்தால்தான், இங்கே இருந்து அந்த காலி கண்டெய்னர்களை ரூர்கேலா, ஜாம்செட்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி திரவ ஆக்சிஜனை பெற முடியும் என்று கூறினார்.