

கோவை மாநகராட்சிப் பகுதியில், கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் சதவீதம் அதிகரித்துள்ளது.
கோவையில், கரோனா தொற்று இரண்டாவது அலையின் பரவல் வேகமாக உள்ளது. மாவட்டத்தில் தினமும் சராசரியாக 3,200 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். மாநகரில் தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
மாநகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, தொற்றாளர்களைக் கண்டறிந்து சிகிச்சைக்கு அனுப்புதல், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்துதல், தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்ட பகுதியைத் தனிமைப்படுத்தி, நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற பணிகளை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் மேற்கொள்கின்றனர். மறுபுறம், கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்தல், நிறுவனங்கள், கடைகளுக்கு சீல் வைத்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
மருத்துவ முகாம்கள்
மாநகராட்சி சுகாதாரத்துறையினரால் தினமும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. தினமும் சராசரியாக 7 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் வரும் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கையில், மாநகரில் தொற்று பாதிக்கப்படுபவர்களின் சதவீதமும் அதிகரித்தது தெரியவந்துள்ளது.
மாநகராட்சி சுகாதாரத்துறையின் கணக்கின்படி, முன்பு 100 பேருக்கு கரோனா பரிசோதனை செய்தால், அதில் 6 முதல் 7 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போதைய சூழலில் 100 பேருக்கு கரோனா பரிசோதனை செய்தால், 22 முதல் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. அதேசமயம், ஆரம்பக் கட்டத்தில், மாவட்டத்தில் தினமும் தொற்று உறுதி செய்யப்படுவோரில், 70 சதவீதம் பேர் மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இது தற்போது, 59 சதவீதத்துக்குக் கீழ் குறைந்துள்ளது.
இதுகுறித்துச் சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலர் கூறும்போது, ‘‘மாநகரில், மருத்துவ முகாம்களைத் தீவிரப்படுத்த வேண்டும். தொற்றாளர்களை அதிக அளவில் கண்டறிந்து, அவர்கள் மூலம் தொற்று மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க வேண்டும். வீடுதோறும் சென்று, தொற்று அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்யும் பணி உள்ளிட்ட தொற்று தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.
தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாநகரில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உதவ, இஎஸ்ஐ மருத்துவனை, ராமநாதபுரம் சிக்னல் அருகே உள்ள மாநகராட்சிப் பள்ளி, அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் பள்ளி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகம் ஆகிய 4 இடங்களில் வழிகாட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் கரோனா தொற்றாளர்களின் ஆக்சிஜன் அளவு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் உதவியுடன் சரிபார்க்கப்படுகிறது. இதில் ஆக்சிஜன் அளவு 96க்கு மேல் உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
94க்கு மேல் உள்ளவர்கள் கரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். ஆக்சிஜன் அளவு 93க்குக் கீழே இருந்தால் அவர்கள் ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். தவிர சி.டி. ஸ்கேன் மூலம் நுரையீரல் பாதிப்பும் பரிசோதிக்கப்படுகிறது. ஒரு தெருவில் 3 வீடுகளுக்கு மேல் பாதிப்பு கண்டறியப்பட்டால், அந்தத் தெரு முழுவதுமாக மூடப்படுகிறது. தொற்றுப் பரவல் தடுப்புப் பணிக்குக் கூடுதல் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கியப் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன’’ என்று தெரிவித்தனர்.