Last Updated : 22 May, 2021 06:50 PM

 

Published : 22 May 2021 06:50 PM
Last Updated : 22 May 2021 06:50 PM

சிவகங்கை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சதவீதம் 7.84: அரசு செயலர் தகவல்

பிரதிநிதித்துவப் படம்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சதவீதம் 7.84 ஆக உள்ளது. அதை உயர்த்த வேண்டும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மைச் செயலரும், கோவிட்-19 தடுப்புப் பணி கண்காணிப்பு அலுவலருமான கார்த்திகேயன் தெரிவித்தார்.

சிவகங்கை ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மைச் செயலர் கார்த்திகேயனும் இன்று சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா கட்டுப்பாட்டு அறை போன்றவற்றை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பிறகு அரசு முதன்மைச் செயலர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ஆட்சியரின் நடவடிக்கையால் சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணி சிறப்பாக உள்ளது. மாவட்டத்தில் தினமும் சராசரியாக 200 பேர் பாதிக்கப்படுகின்றனர். பரிசோதனையை ஒப்பிடும்போது பாதிப்பு 10 சதவீதமாக உள்ளது. இது குறைக்கப்பட வேண்டும். மேலும் திரவ ஆக்சிஜன் தேவை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேவை குறித்து அரசிடம் தெரிவித்து, பெற்றுத் தரப்படும்.

அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துவது மாவட்டத்தில் 7.84 சதவீதம் உள்ளது. அதை உயர்த்த வேண்டும். இதன் மூலம் படிப்படியாக கரோனா பாதிப்பு குறையும்'' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறும்போது, ''18 முதல் 45 வயதிற்குட்பட்டோருக்கு 16,600 தடுப்பூசிகள் வந்துள்ளன. அரசு உத்தரவு வந்ததும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். தடுப்பூசிகள் வீணாவதைத் தடுக்க கிராமம் கிராமாகச் சென்று தடுப்பூசி முகாம் குறித்து முந்தைய நாளே தகவல் தெரிவிக்கப்படும். மறுநாள் தடுப்பூசி செலுத்தப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறைந்தது எப்போதும் 20 படுக்கைகள் காலியாக இருக்கும். இதுவரை படுக்கைகளுக்குப் பற்றாக்குறை ஏற்படவில்லை'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x