எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தல்
எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், அந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்று மக்களவை திருச்சி தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.
திருச்சியில் துவாக்குடி அரசு மருத்துவமனை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, பெல் நிறுவனம் ஆகிய இடங்களில் சு.திருநாவுக்கரசர் இன்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''திருச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டப்பேரவையின் 6 தொகுதிகளுக்குத் தலா 5 ஆயிரம் வீதம் 30 ஆயிரம் முகக்கவசங்களை அந்தந்தத் தொகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சொந்தச் செலவில் வழங்கி வருகிறேன். அடுத்த கட்டமாகவும் முகக்கவசங்களை வழங்குவேன்.
தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இருந்தாலும், ஆக்சிஜன் வசதிகள் இல்லாமல் இருப்பதுதான் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி செய்யப் பல்வேறு துறைகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் நிறுவுவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.
7 பேர் விடுதலை விவகாரத்தில் தண்டனையோ, விடுதலையோ நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது நியாய விரோதச் செயல், தவறான நடவடிக்கை. தொகுதி மக்களுக்கு எம்.பி.க்கள் நேரடியாகத் திட்டங்களைச் செயல்படுத்தும் வாய்ப்பு அந்த நிதியில்தான் உள்ளது.
எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மாநில அரசுகள் நிறுத்தி வைக்கவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியை கரோனா தடுப்பு மட்டுமின்றி மற்ற வளர்ச்சிப் பணிகளுக்கும் பயன்படுத்த முடியும். எனவே, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.''
இவ்வாறு சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
கரோனா பரவல் காரணமாக எம்.பி.க்கள் தொகுதி வளர்ச்சி நிதியை 2 ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்தும், அந்த நிதியை கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்து, கடந்த ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
