Last Updated : 22 May, 2021 05:47 PM

 

Published : 22 May 2021 05:47 PM
Last Updated : 22 May 2021 05:47 PM

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை நாங்கள் மன்னிக்க மாட்டோம்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை நாங்கள் மன்னிக்க மாட்டோம். புதுச்சேரியில் கடுமையான முறையில் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று(மே. 22) வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தேவையான ஆக்சிஜன் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் இல்லை. அதற்கான கட்டமைப்பைக் குறுகிய காலத்தில் உருவாக்காமல் இருந்ததால் பலர் உயிரிழந்துள்ளனர். ஜிப்மரில் ஏற்கெனவே 91 வென்டிலேட்டர் படுக்கை உள்ளது. மேலும் 9 வென்டிலேட்டர் படுக்கைகளை உருவாக்கவுள்ளதாகக் கூறியிருக்கிறார்கள்.

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் மிகக் குறைந்த அளவிலேயே வென்டிலேட்டர் படுக்கைகள் உள்ளன. ஆக்சிஜன் படுக்கைகளை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது வரவேற்கத்தக்க ஒன்று. போர்க்கால அடிப்படையில் வென்டிலேட்டர், ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிப்மரில் குறைந்தபட்சம் 1000 படுக்கைகளும், அதில் 70 சதவீதம் ஆக்சிஜன் படுக்கைகளாகவும், 30 சதவீதம் வென்டிலேட்டர் படுக்கைகளாகவும் அமைத்தால்தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். அதேபோல், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 700 ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் படுக்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள படுக்கைகளில் 75 சதவீதத்தை மாநில அரசு கையகப்படுத்தி, அதன் மூலம் ஆக்சிஜன், வென்டிலேட்டர் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற முடியும்.

தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்களைப் போர்க்கால அடிப்படையில் நியமிக்க வேண்டும். மற்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதியை எடுத்து சுகாதாரத் துறைக்கு ஒதுக்க வேண்டும். மாநில நிர்வாகத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கண்காணிக்க வேண்டும். பதவியேற்பதற்குக் காலதாமதம் ஏற்படுகிறது. அது உட்கட்சிப் பிரச்சினை. அதைப் பற்றி நான் பேசவில்லை. ஆனால், தேர்தல் முடிந்து அறிவிப்பு வந்த பிறகும் கூட மக்களுடைய பிரச்சினைகளை அணுக வேண்டிய முறையில் நிர்வாகம் அணுகவில்லை. இது மிகப்பெரிய வேதனையாக உள்ளது.

நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் எங்களைப் பொதுமக்கள் தொடர்புகொண்டு ஆக்சிஜன், வென்டிலேட்டர் படுக்கைகள் கிடைக்கவில்லை. ஆம்புலன்ஸில் அமர்ந்திருக்கிறோம் எனச் சொல்லும்போது வேதனை ஏற்படுகிறது. கட்டமைப்பு வசதி கொண்ட புதுச்சேரியில் இப்பணியை ஒருங்கிணைந்து செய்வதற்கு நிர்வாகத்தில் பொறுப்பேற்றுள்ளவர் யாரும் இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கண்காணிப்பதற்கு நிரந்தரமான அதிகாரிகளைப் போட வேண்டும். நோடல் அதிகாரியை மட்டும் போட்டால் போதாது. அந்த அதிகாரிகள் முழுப் பொறுப்பையும் ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில தனியார் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் அதிக பணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. அதனையும் கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி போடும் திட்டத்தை மிகத் துரிதமாகச் செயல்படுத்த வேண்டும். நூற்றுக்கு நூறு சதவீதம் மக்களுக்குத் தடுப்பூசி போட்டோம் என்ற நிலையை உருவாக்கினால் இந்தியாவிலேயே கரோனாவை ஒழித்த முன்னுதாரணமான மாநிலமாக புதுச்சேரி இருக்கும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. மிகக் குறைந்த அளவே தடுப்பூசி வந்துள்ளது. அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடும் வேலையை மாநில நிர்வாகம் துரிதமாகச் செய்ய வேண்டும். மத்திய அரசு காலதாமதப்படுத்தினால் கூட மாநில நிதியிலிருந்து தடுப்பூசி பெற்று மக்களுக்குப் போட வேண்டும்.

கருப்பு பூஞ்சை நோய் உயிரிழப்பு எனும் பேராபத்தை ஏற்படுத்துகிறது. அதனை முதலிலேயேயே கண்டுபிடித்து மக்களுக்கு மருத்துவம் அளித்துக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி அரசு உடனே இதனைப் பேரிடர் நோய் என அறிவித்து, அதற்குத் தேவையான மருந்துகளைக் கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு ஊரடங்கை மாநில அரசு கடுமையாக கடைப்பிடிக்கவில்லை. 12 மணிக்கு மேல் மக்கள் தாராளமாக வெளியே உலவுகின்றனர். அவர்களைக் கேட்க ஆளில்லை. ஊரடங்கிலும் மக்கள் நடமாடுவதால் கரோனா தொற்று குறையவில்லை. எனவே, கடுமையான முறையில் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் உட்பட பல லட்சம் பேர் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு அறிவித்த 5 கிலோ அரிசியைக் கொடுத்துவிட்டால் மட்டும் போதாது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் அறிவித்துக் கொடுக்கிறார். அதேபோல், புதுச்சேரியில் வசதியுள்ளவர்கள், அரசு ஊழியர்கள் தவிர்த்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

ஆளுநர் பல பகுதிகளுக்குச் சென்றுவிட்டு சரியாக இருக்கிறது என அங்கீகாரம் கொடுப்பதும், அறிவிக்கை விடுவதுமாக இருந்தால் போதாது. முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்களின் பணிகளைக் கண்காணிக்க வேண்டும்.

ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தற்போது அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம் என சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பெருந்தன்மையோடு கூறியுள்ளனர்.

ஆனால், ராஜீவ் காந்தியின் இழப்பு நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. அவரைக் கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. அது சில அரசியல் கட்சி மற்றும் பொதுநலவாதிகளின் கருத்தாக இருக்கலாம். ஆனால், காங், தொண்டன் என்ற முறையில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தாக வேண்டும். அவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். இது மன்னிக்க முடியாத குற்றம். அவர்கள் நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்”.

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x