Published : 22 May 2021 05:29 PM
Last Updated : 22 May 2021 05:29 PM

கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்களுக்குப் புதிய பங்களாக்கள் ஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பங்களாவில் வசிக்க அனுமதி

சென்னை

தமிழக அமைச்சர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலை பங்களாக்களில் புதிய அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் வசித்த அதிமுக அமைச்சர்கள், திமுக ஆட்சி அமைத்ததை அடுத்து பங்களாக்களை காலி செய்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அதே பங்களாவில் வசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர்கள் வசிக்கும் ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலையில் மொத்தம் 30 பங்களாக்கள் உள்ளன. இதில் முன்னர் அமைச்சர்களாக இருந்த அதிமுகவினர் தற்போது ஆட்சி மாறியதால் காலி செய்து வருகின்றனர்.

தற்போது 20 பங்களாக்கள் காலி செய்யப்பட்டுவிட்டன. ஒரு பங்களாவில் இருப்பவரே மீண்டும் வசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9 பங்களாக்கள் முழுமையாக காலி செய்யப்பட்டு 8 பங்களாக்களில் மராமத்து வேலை நடந்து வருகிறது.

கடந்த 13ஆம் தேதி புதிய அரசின் 30 அமைச்சர்களுக்கும், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு கொறடாவுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது திமுக அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பங்களா, இதற்கு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வசித்த பங்களா குறித்த விவரம்:

1. சூரியகாந்தி இல்லம் - முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வசித்த இல்லம். தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

2. செண்பகம் இல்லம் - முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வசித்த இல்லம். தற்போது வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

3. செந்தாமரை இல்லம் - முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வசித்த இல்லம். தற்போது செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

4. சாமந்தி இல்லம் - முன்னாள் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு வசித்த இல்லம். தற்போது சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

5. செவ்வந்தி இல்லம் - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசித்த இல்லம். தற்போது எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் அதே இல்லத்தில் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

6. ரோஜா இல்லம் - முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வசித்த இல்லம். தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

7. சிறுவாணி இல்லம் - முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வசித்த இல்லம். தற்போது சட்ட அமைச்சர் ரகுபதி ஒதுக்கப்பட்டுள்ளது.

8. தாமிரபரணி இல்லம் - முன்னாள் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வசித்த இல்லம். தற்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

9. வைகை இல்லம் - முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வசித்த இல்லம். தற்பொழுது வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

10. மனோரஞ்சிதம் இல்லம் - முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வசித்த இல்லம். தற்போது ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

11. முல்லை இல்லம் - முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வசித்த இல்லம். தற்போது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

12. தென்பெண்ணை இல்லம் - முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வசித்த இல்லம். தற்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

13. காவேரி இல்லம்- முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வசித்த இல்லம். தற்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

14. அதே வளாகத்தில் முன்னாள் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வசித்த இல்லம், தற்போது துணை சபாநாயகர் பிச்சாண்டிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

15. அதே வளாகத்தில் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வசித்த இல்லம், தற்போது மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

16. எழில் இல்லம் - முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வசித்த இல்லம். தற்போது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

17. குறிஞ்சி இல்லம் - முன்னாள் சபாநாயகர் தனபால் வாசித்த இல்லம், தற்போது சபாநாயகர் அப்பாவுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

18. அன்பு இல்லம் - முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வசித்த இல்லம், தற்பொழுது வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

19. திருவரங்கம் இல்லம்- முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வசித்த இல்லம், தற்பொழுது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

20. அதே வளாகத்தில் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் வசித்த இல்லம், தற்போது பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

21. அதே வளாகத்தில் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வசித்த இல்லம், தற்போது அரசு கொறடா கோவி.செழியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

22. அதே வளாகத்தில் முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி வசித்த இல்லம், தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

23. அதே வளாகத்தில் முன்னாள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி வசித்த இல்லம், தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

24. அதே வளாகத்தில் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வசித்த இல்லம், தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

25. அதே வளாகத்தில் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வசித்த இல்லம், தற்பொழுது சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

26. அதே வளாகத்தில் முன்னாள் அரசு கொறடா ராஜேந்திரன் வசித்த இல்லம், தற்போது வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

27. அதே வளாகத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வசித்த இல்லம், தற்பொழுது போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒதுக்கப்பட்டுள்ளது.

28. அதே வளாகத்தில் முன்னாள் கதர் கிராமத் தொழில் அமைச்சர் பாஸ்கரன் வசித்த இல்லம், தற்போது வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

29. அதே வளாகத்தில் முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வசித்த எல்லாம், தற்போது காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

30. அதே வளாகத்தில் முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் வசித்த இல்லம், தற்போது கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தாம் முன்னர் வசித்த குறிஞ்சி இல்லத்துக்குக் குடிபோகலாம், அல்லது அவரது அலுவலகம் அங்கு இயங்கும் எனத் தகவல் வெளியான நிலையில், அவர் தனது சித்தரஞ்சன் தாஸ் இல்லத்திலேயே வசிக்கிறார்.

அதேபோன்று எஞ்சியுள்ள அமைச்சர்கள் நீர்வளத்துறை அமைச்சர், அவை முன்னவர் துரைமுருகனுக்கும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கும், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கும், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கும், சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தனுக்கும் பங்களாக்கள் ஒதுக்கப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x