

அவிநாசி, சேவூர் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் செல்லும் ஓட்டுநருக்குப் பொதுமக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர் சுற்றுவட்டாரப் பகுதியில் கரோனா தொற்று அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் பெரும் சிரமம் இருந்து வரும் நிலையில், அவிநாசி அருகே தேவராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பஷீர் முகமது (எ) சிராஜ் (36), கரோனாவால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்குத் தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் செல்கிறார்.
இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் சிராஜ் கூறியதாவது:
''மிகவும் ஏழ்மையான குடும்பம்தான் என்னுடையது. கரோனா சூழலில் பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என நினைத்தேன். 'அவிநாசி கோவிட் இணைந்த கரங்கள்' அமைப்புடன் இணைந்து, நாள்தோறும் ஆட்டோவில் சென்று கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற பணிகளைச் செய்து வருகிறேன்.
மேலும் தற்போது, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கோ அல்லது வீட்டிற்கோ செல்ல, ஆம்புலன்ஸில் மிகக் குறைந்த தொலைவாக இருந்தாலும் அதிகபட்ச வாடகை கேட்கின்றனர். குறிப்பாகத் தனியார் ஆம்புலன்ஸ்கள் அவிநாசி- திருப்பூருக்குத் தொற்றாளர்களை அழைத்துச் செல்ல ரூ.5000 வரை கேட்கிறார்கள். இதுபோன்று பல்வேறு இடங்களில் கேள்விப்பட்டதும், மனதுக்கு சரியாகப் படவில்லை. இதனால் சமீபமாக கரோனா தொற்றாளர்களை இலவசமாக அழைத்துச் செல்கிறேன்.
நிரந்தரமற்ற மனித வாழ்வு இது என்பதை, இதுபோன்ற கொள்ளை நோய்கள்தான் நமக்கு உணர்த்துகின்றன. ஆகவே வாழும் காலத்தில் மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தால், இப்படிச் செய்கிறேன்.
அவிநாசி, சேவூர் சுற்றுவட்டாரப் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் சென்று வருகிறேன். நாள்தோறும் 24 மணி நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எனது 99942-68319 அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்''.
இவ்வாறு ஆட்டோ ஓட்டுநர் சிராஜ் தெரிவித்தார்.