

தஞ்சாவூர் மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை நோயினால் செவிலியர் உள்பட 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தஞ்சையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2-வது அலை தீவிரப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது கருப்புப் பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது. வட மாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ராஜஸ்தான், தெலங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் இதனைத் தொற்று நோயாகவும் அறிவித்துள்ளன.
கருப்புப் பூஞ்சை நோய் சுற்றுப்புறத்தில் உள்ள பூஞ்சை கிருமிகள் மூலம் நாசி வழியாக உடலுக்குள் சென்று தொற்றை ஏற்படுத்துகின்றன. இந்தத் தொற்று முதல் முதலில் கண்களைப் பாதிக்கிறது. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த நோய்த் தொற்று தாக்குகிறது. தற்போது கரோனா நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை இந்த நோய் எளிதில் தாக்குகிறது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கருப்புப் பூஞ்சை நோய் காணப்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலும் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 ஆண்களுக்கும், தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவருக்கும் மேலும் இரண்டு ஆண்கள் என ஐந்து பேருக்கு இந்த கருப்புப் பூஞ்சை நோய்த் தோற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.