

தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறைந்த பிறகு, தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை. பரவலாக வறண்ட வானிலையே காணப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இரவு 9 மணிக்கு பிறகும், அதிகாலை நேரங்களிலும் பனிப்பொழிவு காணப்படு கிறது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் மழை அளவு படிப்படியாக குறைந்துவிட்டது. அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். உட்புற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் தூறல் பெய்யக்கூடும். சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் பகலில் மிதமான வெயில் இருக்கும். மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்’’ என்றனர்.