Published : 22 May 2021 10:20 AM
Last Updated : 22 May 2021 10:20 AM

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?-முதல்வர் ஸ்டாலின் பேட்டி

சென்னை

ஊரடங்கு நீட்டிப்பு இருக்குமா என்பது குறித்து இன்று ஆலோசனை நடத்திய பின் முடிவை அறிவிப்போம் எனத் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் , நிவாரண தொகையின் மீதி 2000 ரூபாய் ஜூன் 3 ஆம் தேதிக்குள் வழங்கப்படும், சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் நேற்று மாலை செய்தியாளர்களின் சந்திப்பின்போது அளித்த பேட்டி:

கரோனா தொற்றுக்கு அடுத்தபடியாக கருப்பு பூஞ்சை தொற்று அதிகப்படியான அச்சுறுத்தலாக உள்ளது. அதுகுறித்து என்ன தடுப்பு நடவடிக்கைகள் அரசு மேற்கொண்டுள்ளது?

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் அவர்கள் அறிக்கை கொடுத்துள்ளார். தற்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் விளக்கமளிப்பார் என்று தெரிவித்தார், இதைத்தொடர்ந்து

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர், “கருப்பு பூஞ்சை நோயைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்து வழங்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பட்சத்தில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது. தமிழகத்தில் 9 நபர்களுக்கு இந்நோயின் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நோய்க்கு சரியான மருந்து உள்ளது”. எனத் தெரிவித்தார்.

பொது முடக்கத்தைப் பொறுத்தவரை முதல்வர் அவர்கள் முழு முடக்கம் தீர்வாகாது என்று கூறியுள்ளீர்கள். மாற்றுத்திட்டம் ஏதாவது உண்டா? அது எப்போது?

முதல்முறை முடக்கம் அறிவித்த போது 6 முதல் 12 மணி வரை பொருட்கள் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது அதையும் குறைத்து 6 மணி முதல் 10 மணி வரை தான் அனுமதிக்கின்றோம். அப்போதும் கூட்டம் வருகிறது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மட்டும்தான் இந்த நோய்தொற்று அதிகமாக உள்ளது. சென்னையில் அதிகமாக இருந்தது, தற்போது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. கோவையில் அந்த சூழ்நிலை இன்னும் வரவில்லை.

காரணம் அருகில் உள்ள கேரளா, கர்நாடாகாவில் இருந்து தொழிற்சாலைக்களுக்கு வரும் தொழிலாளர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. காய்கறி வாங்க வருபவர்கள், கார் போக்குவரத்து அதிகமாக உள்ளது. கோவையில் மொத்தமாக தொழிலதிபர்கள், வணிகர்கள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தெரிவிப்பது என்னவென்றால், இன்னும் கட்டுப்படுத்துங்கள்.

முழு முடக்கம் இரண்டு வாரம் அல்லது மூன்று வாரங்கள் நீடித்தால் தான் இதற்கு முடிவு வரும் என சொல்கிறார்கள். இதனால் நாளை காலை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அனைத்து கட்சியினர், மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் ஆகியோரிடம் ஆலோசித்து இதுகுறித்து முடிவு செய்யப்படும். ஏற்கனவே 4000 ரூபாய் கரோனா நிதியாக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 3ம் தேதி வழங்கப்படும் என சொல்லியிருந்தோம்.

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடனேயே கரோனாவின் வீரியம் அதிகமாக இருந்த காரணத்தினால் முதல் தவணையாக 2000ம் ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டது. ஜுன் 3ம் தேதிக்குள் இரண்டாம் தவணை 2000 ம் ரூபாய் வழங்கப்படும்.

முதன்முதலில் நாட்டில் கோவிட் பரவ ஆரம்பித்த நேரத்தில் மத்திய அரசு பல்வேறு பணிகளை முன்னெடுத்து தேசிய அளவில் பொதுமுடக்கம் செய்தார்கள். தற்போது நோயின் தாக்கம் தீவிரமாக உள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என சில மாநிலங்கள் தெரிவித்துள்ளன. நம்முடைய பார்வை எவ்வாறாக உள்ளது?

மத்திய அரசைப் பொறுத்தவரையில் சில மாநிலங்களுக்கு அதிகமாக வழங்குகிறார்கள். இருந்தாலும் நான் பிரதமரிடத்தில் தொடந்து வலியுறுத்தி வருகிறேன். பிரதமர் இதற்காக மத்திய ரயில்வே துறை அமைச்சரை தமிழ்நாட்டிற்காக நியமித்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளலாம் என என்னிடம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரை நான் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறேன். அவரும் கோரிக்கைகளை பரிசீலித்து ஆக்ஸிஜன் ஒதுக்கீடு செய்து தருகிறார்.

நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலுவை டெல்லிக்கு அனுப்பியுள்ளேன். அவரும் 4 நாட்களாக மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து நம்முடைய பிரச்சினைகளை தெரிவித்து வருகிறார். ஒடிசாவில் புயல் காரணமாக ஆக்ஸிஜன் வரத்து குறையும் என்ற காரணத்தினால் முன்னெச்சரிக்கையாக மகாராஷ்டிராவில் இருந்து ஆக்ஸிஜன் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி பெறுவதில் பிரச்சினை உள்ளது. அதற்காக தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி கிடைக்குமா?

புதிய மற்றும் விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கப்படும்.

தமிழக அரசு செய்தியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்திருந்தது. தொடர்ந்து செய்தியாளர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து அரசாணை வெளியிடப்படுமா?

இது அரசின் பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும்.

பெருநகரங்களில் துரிதமாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவது போல் கிராமங்களிலும், பின்தங்கிய மாவட்டங்களிலும் எடுக்கப்படுமா?

கிராமப்பகுதிகளையும் சேர்த்துதான் ஒரு மக்கள் இயக்கமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அது நகரம், மாநகரத்தோடு நிற்காமல் கிராமப்புறங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மீண்டும் பொது முடக்கம்-ஊரடங்கு தொடருமா?

அதற்காகத்தான் நாளை அனைத்துக் கட்சி கூட்டமும், மருத்துவ நிபுணர்களோடு கலந்தாலோசனைக் கூட்டமும் நடைபெற இருக்கிறது. நாளை முடிவு செய்யலாம் என இருக்கிறோம்.

உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களை தீர்வு காண ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட்டதும் அந்தத்துறை நிரந்தரமாக்கப்படுமா?

முதலில் கொரோனா தொற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். அதற்குப்பிறகு இதுகுறித்து முடிவெடுக்கலாம். உங்கள் நல்ல எண்ணத்திற்கு நன்றி.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா?

தற்போது அரசின் கவனமும், நமது எண்ணம் அனைத்தும், இந்தப் பெருந்தொற்றை தடுப்பதில்தான் உள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களோடு கலந்து பேசி வருகிறோம். இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிக்கை வெளியிடுவார். மூன்றாவது அலை வருவதாகக் கூட சொல்லியிருக்கிறார்கள். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

மே 7 ஆம் தேதி இந்த அரசு பொறுப்பேற்றபோது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருந்தது. அதிகாலை 3, 4 மணிக்குக் கூட தொலைபேசியில் ஆக்ஸிஜன் தேவை என்ற செய்தி வரும். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 100 ஆம்புலன்ஸ்கள் கூட வரிசையில் நிற்கும். நோயாளிகளுக்கு படுக்கை, ஆக்ஸிஜன் வசதி இல்லாமல் இருந்த நிலை இருந்தது. இப்போது 4 அல்லது 5 ஆம்புலன்ஸ்கள் தான் வெளியில் நிற்கின்றன. அதையும் குறைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை பாதியாக குறைப்பது குறித்து பரிசீலிப்பதாக ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறதே?

வதந்திகளுக்கும், பரபரப்பு செய்திகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

பிதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திப்பீர்களா?

இப்பொழுது டெல்லிக்கு போக முடியாத நிலை உள்ளது. சூழ்நிலை அமைந்தால் டெல்லிக்குச் சென்று முதல்வர் என்ற முறையில் பிரதமரை சந்திப்பேன். உரிமையோடு தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி, நமக்கு செய்து தரக்கூடிய வசதிகளை நிச்சயமாக நேரில் கேட்பேன்.

இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் “ பிரதமருடன் நடைபெற்ற காணொளிக்காட்சியில் சென்னையில் புதிதாக கார் ஆம்புலன்ஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி போடுதல், மண்டலத்திற்கு 15 மருத்துவர்கள் வீதம் 250 மருத்துவர்களைக் கொண்டு, இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டங்களை பாராட்டிய பிரதமர் இந்தியா முழுவதும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி, முதல்வரை பாராட்டி நன்றி தெரிவித்தார்”. எனத்தெரிவித்தார்.

திருச்சியில் ஆக்ஸிஜன் தேவை அதிகமாக உள்ளது. பெல் யூனிட்டையும் மூடிவிட்டார்கள். மறுபடியும் அதனை தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளதா?

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “பெல் நிறுவனத்தில் இருந்து ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. பெல் நிறுவனத்துடன் பேசியபோது அவர்கள் திருச்சியிலும், ராணிப்பேட்டையிலும் 30 அல்லது 40 நாட்களுக்குள் நமக்கு ஆக்ஸிஜன் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்கள்”. என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x