

தமிழகத்தில் கரோனா தடுப்புப்பணிகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்புதொடர்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா வைரஸ்பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 தினங்களாக நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் என்றஅளவில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் கரோனா பரவலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றுமருத்துவத் துறையினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, மருத்துவ கட்டமைப்புகளை அதிகரிக்கும் பணியில் தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த 10-ம் தேதிமுதல் 24-ம் தேதி (நாளை மறுநாள்)வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில்எடுக்கப்பட்ட முடிவுகள் படி, கடந்த 15-ம் தேதி முதல் முழு ஊரடங்கில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்துடன், முதல்வர் தலைமையில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு அவசர அவசியம் கருதி கூடி ஆலோசிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.
காலை 11 மணிக்கு கூட்டம்
முழு ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவுக்கு வரும் நிலையில், தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, ஊரடங்கை நீட்டிப்பது உள்ளிட்டவை குறித்து இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. முன்னதாக, மருத்துவ நிபுணர் குழுவினருடனும் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து, ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்றே வெளியாகும் என்றும், குறிப்பாக மேலும்ஒரு வாரம் அதாவது மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ள தாகவும் கூறப்படுகிறது.